
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் வைத்து நிற்க வைத்து அவமரியாதை செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாஜக அண்ணாமலை அமர்ந்திருக்க, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மட்டும் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 மார்ச் 19ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பழக்க வழக்கம் எல்லாம் பஞ்சாயத்தோட இருந்துக்கனும் முருகா. நீ MPஏ ஆனாலும் உக்கார சீட்லாம் கேக்க கூடாது. பார்ப்பன ஜனதா கட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இதுதான் கதி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive
இந்த புகைப்பட பதிவை ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளும் ஒப்பந்தம் செய்துகொள்ளும் வீடியோ, புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அமைச்சர் எல்.முருகன் மட்டும் நிற்கும் காட்சியை மட்டும் தனியாக எடுத்த சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைத்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த தகவல் உண்மையில்லை என்பதை உறுதி செய்ய ஆதாரங்களைத் தேடினோம். இந்த சந்திப்பு தொடர்பாக அனைத்து ஊடகங்களிலுமே வீடியோவுடன் செய்தி வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்தாலே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உண்மையில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்த வீடியோவில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி, அண்ணாமலையுடன் எல்.முருகனும் சரிசமமாக அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. பத்திரத்தில் கையெழுத்திடும் நிகழ்வு வரும் போது போது எல்.முருகன் எழுந்து தன் கையில் வைத்திருந்த பத்திரம் அல்லது ஒப்பந்தத்தை டாக்டர் ராமதாஸிடம் கொடுப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது.
மேலும் டாக்டர் ராமதாஸ் பாஜக நிர்வாகிகளுக்கு விருந்து அளித்த வீடியோவும் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் டாக்டர் ராமதாசுக்கு வலது புறத்தில் அண்ணாமலையும் இடது புறத்தில் எல்.முருகனும் அமர்ந்து சாப்பிடுகின்றனர். இவை எல்லாம் டாக்டர் ராமதாஸின் இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு நாற்காலி கொடுக்காமல் அவமரியாதை செய்யப்பட்டார் என்ற பதிவு தவறானது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கு இருக்கை அளிக்காமல் நிற்க வைத்து அவமானப்படுத்தியதாக பரவும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:டாக்டர் ராமதாஸ் வீட்டில் நிற்க வைத்து அவமானப்படுத்தப்பட்டாரா எல்.முருகன்?
Written By: Chendur PandianResult: False
