தி.மு.க அரசு அமைந்த பிறகு மதுரை மாநகராட்சியில் வாகன பராமரிப்புக்கு என்று ரூ.51.64 கோடி செலவு செய்யப்பட்டது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், "வாகன ரிப்பேர் செலவு ரூ.51.64 கோடி... மிரள வைக்கும் மதுரை மாநகராட்சி கணக்கு!" என்று இருந்தது.

நிலைத் தகவலில், "வாகன ரிப்பேர் செலவு ரூ.51.64 கோடி... - மிரள வைக்கும் மதுரை மாநகராட்சி கணக்கு! விடியல் என்றால் சும்மாவா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Prakash Dindigul East என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் அக்டோபர் 14, 2022 அன்று பதிவிட்டிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

விகடன் வெளியிட்டிருந்த செய்தியுடன் மீம் ஒன்றும் பகிரப்பட்டு வருகிறது. அதில், "என்ன ராக்கெட்டா ரிப்பேர் பன்னுன? இவ்வளவு செலவு ஆகியிருக்கு - தீம்கா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை True Or Fake என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 அக்டோபர் 14ம் தேதி வெளியிட்டுள்ளது. இதையும் ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதுரை மாநகராட்சியில் வாகன பராமரிப்பில் முறைகேடு நடந்ததாக ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்த செய்தியை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதனுடன், தி.மு.க ஆட்சியில் இந்த முறைகேடு நடந்துள்ளது என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து வருகின்றனர். இந்த செய்தி உண்மையா என்று அறிய ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரையைப் பார்த்தோம்.

ஜூனியர் விகடன் இணையத்தில் அந்த கட்டுரை பார்த்தோம். முதல் பத்தியிலேயே ஐந்து ஆண்டுகளில் வாகன பராமரிப்புக்கு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த ஐந்தாண்டு என்பதைக் கட்டுரையின் உள்ளே குறிப்பிட்டிருந்தனர். 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் வாகன பராமரிப்புக்கு 51.64 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர்.

தி.மு.க அரசு 2021 மே மாதம் தான் பொறுப்புக்கு வந்தது. தி.மு.க ஆட்சி அமைவதற்கு முந்தைய கணக்கு இது என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், இதற்கும் தி.மு.க ஆட்சிக்கும் தொடர்பில்லை என்பது தெரிந்தது.

ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்த செய்தியில், இது குறித்து சமூக ஆர்வலர் ஹக்கீம் நம்மிடம் பேசும்போது, “தூய்மைப் பணியாளர் ஊதியம் தொடங்கி ஸ்மார்ட் சிட்டி நிதிவரை ஊழல் சர்ச்சையில் சிக்கிய மதுரை மாநகராட்சி இப்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் 2015 முதல் 2020 வரையிலான வரவு செலவுக் கணக்கு விவரங்களைப் பார்க்கும்போது, அதிகாரிகள் ‘காந்தி கணக்கு’ எழுதியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

உண்மைப் பதிவைக் காண: vikatan.com I dailyhunt.in I Archive

கடந்த 2016-2020 நிதியாண்டுகளில் மாநகராட்சியின் மொத்த செலவீனம் ரூபாய் 2,228.76 கோடி. இதில், ஊழியர்களின் சம்பளம், தினசரிப் பணிகள் உள்ளிட்ட முக்கியச் செலவுகள் போக, கணக்கில் காட்டியிருக்கும் மற்ற செலவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மாநகராட்சியில் மொத்தமே 200 வாகனங்கள்தான் இருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் வாகனப் பழுது நீக்கச் செலவு மட்டும் 51.64 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டிருக் கிறார்கள். இந்தத் தொகைக்கு 100 புதிய கார்களையே வாங்கியிருக்கலாம். தெருவிளக்குகள் பழுது பார்க்க மட்டும் 4.59 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக எழுதி யிருக்கிறார்கள்.

இதேபோல, பினாயில், கொசு மருந்து வாங்க ரூ.9 கோடியும், வழக்கறிஞர் கட்டணமாக ரூ.3.5 கோடியும், ஆடிட்டர் ஃபீஸாக ரூ.4.44 கோடியும், விளம்பரச் செலவு ரூ.3.75 கோடியும் ‘கணக்கு’ காட்டப் பட்டிருக்கிறது. இதில் வேதனை என்னவென்றால், வாகனங்களைப் பராமரிக்க மாநகராட்சியே பணிமனை களை வைத்திருக்கிறது. தெருவிளக்கு அமைக்க ஒப்பந்தம் போடும்போதே பராமரிப்புக்கும் சேர்த்தே டெண்டர் கொடுக்கப்படும். அதேபோல மாநகராட்சிக் கென்றே வழக்கறிஞர்களும் ஆடிட்டர்களும் இருக்கிறார் கள். எனவே, இதில் பெரிய அளவுக்கு முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது” என குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம் 2016-20 வரையிலான காலகட்டத்தில் முறைகேடு தொடர்பாக ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்த கட்டுரையை படித்துக் கூட பார்க்காமல், நிச்சயம் அது தி.மு.க அரசு செய்த முறைகேடாகத்தான் இருக்கும் என்று கருதி வதந்தி பரப்பியிருப்பது தெரிந்தது. தங்கள் ஆட்சிக்காலத்தில் நடந்தது என்பதைக் கூட தெரியாமல் அ.தி.மு.க உறுப்பினர்களும் கூட இதை பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

நம்முடைய ஆய்வில், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடு தொடர்பான செய்தியை, திமுக ஆட்சியில் நடந்ததாகத் தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மதுரை மாநகராட்சியில் வாகன பராமரிப்பு முறைகேடு தொடர்பாக ஜூனியர் விகடனில் கட்டுரை வெளியானது உண்மைதான், ஆனால் அது தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடந்தது இல்லை, 2016-20 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்தது என்பதை அறியாமல் வதந்தி பரப்பி வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஒரே ஆண்டில் வாகன பராமரிப்புக்கு ரூ.51.64 கோடி செலவு என்று தி.மு.க அரசு கணக்கு காட்டியதா?

Fact Check By: Chendur Pandian

Result: Partly False