
சௌதி அரேபியாவில் இந்தியப் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
புதிய இந்திய நாடாளுமன்ற கட்டத்தின் மீது மோடி சிலை இருப்பது போன்று சிறிய அளவிலான சிலை ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “அனைவரும் மெழுகு சிலைகளை நிறுவும் போது, சவுதி அரேபியாவில் பாரதப் பிரதமரின் தங்க சிலை நிறுவப்பட்டுள்ளது… கேரளாவில் சிலருக்கு அஜீரணம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவை அபர்ணா அபி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 12ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை சமூ ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடிக்கு சௌதி அரேபியாவில் தங்கத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அங்கு சிலைகள் அமைக்க அனுமதி உள்ளதா என்ற கேள்வி எழவே, இந்த தகவல் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த தங்கச் சிலை சௌதி அரேபியாவில் இல்லை, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் மற்றும் ஊடகங்கள் பலவும் இந்த தங்கச் சிலை தொடர்பாக கடந்த 2023 ஜனவரியில் செய்தி வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த வீடியோவில், “குஜராத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் சூரத்தைச் சேர்ந்த நகை உற்பத்தி நிறுவனம் ஒன்று நரேந்திர மோடியின் தங்கச் சிலையை உருவாக்கியுள்ளது. 156 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதால் 156 கிராமில் இந்த உருவச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 11 லட்ச ரூபாய்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோவை 2023 ஜனவரியில் பலரும் யூடியூப், எக்ஸ் (ட்விட்டர்), ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் கூட “மும்பையில் நடந்த தங்க கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தங்கத்தாலான மோடியின் சிலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நம்முடைய ஆய்வில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த சிலையை உருவாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சௌதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கச் சிலை நிறுவப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சௌதி அரேபியாவில் நரேந்திர மோடிக்கு தங்கச் சிலை நிறுவப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சௌதி அரேபியாவில் நரேந்திர மோடிக்கு தங்கச் சிலை நிறுவப்பட்டதா?
Written By: Chendur PandianResult: Partly False
