
ரஷ்ய அதிபர் புதின் இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை அளித்து நின்றார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ரஷ்ய அதிபர் நடந்து வர திடீரென்று இந்திய தேசிய கீதம் பாடப்படுகிறது. உடனே புதின் நின்று மரியாதை செலுத்தும் வகையில் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “நம் நாட்டின் தேசியக் கொடிக்கு என்ன மதிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “நம் நாட்டின் தேசிய கொடிக்கு என்ன மதிப்பு🇮🇳 நண்பேன்டா🎉ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிரேட்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு இந்தியாவில் மிகப்பெரிய ஆதரவு இருந்து வந்தது. அவர் வெற்றிபெற யாகம், பூஜை எல்லாம் செய்யப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் டிரம்ப் இறங்கவே, ஆதரவை அப்படியே ரஷ்யா பக்கம் திருப்பிவிட்டனர் நெட்டிசன்கள். தற்போது ரஷ்ய அதிபர் இந்தியா மீது அதிக பாசத்துடன் இருப்பது போன்று பதிவுகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை அளிக்கும் வகையில் புதின் நின்றார் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோ முழுமையாக இல்லை. புதின் நடந்து வரும்போது திடீரென்று இந்திய தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அதிபர் வருகிறார் என்றால், அவர் வந்த பிறகுதான் முறைப்படி தேசிய கீதம் இசைக்கப்படும். ஆனால், அவர் வருவதற்கு முன்பே பாடல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். 13-14 ஆண்டுகளாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், இந்திய தேசிய கீதத்துக்குப் பதில் ரஷ்ய தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. ஆடியோவை மட்டும் எடிட் செய்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து தேடியபோது, 2012ம் ஆண்டு வெளியான வீடியோ ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் ஐக்கிய ரஷ்ய கட்சியின் மாநாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2011ம் ஆண்டு செப்டம்பர் 23, 24ம் தேதிகளில் அந்த மாநாடு நடந்ததாக மேடைக்கு பின்புறம் இருந்த பேனரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது புதின் பிரதமராக இருந்தார். அவரை மேடைக்கு அழைத்தபோது, ரஷ்யாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அவர் அதற்கு மரியாதை அளிக்கும் வகையில் நிற்கிறார். இந்த வீடியோவை எடிட் செய்து இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை அளித்தார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்திலும் கூட இது தொடர்பான கட்டுரை வெளியாகி உள்ளது. அதை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
முடிவு:
நடந்து வரும்போது இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் அதற்கு மரியாதை அளிக்க நின்ற ரஷ்ய அதிபர் புதின் என்று பரவும் வீடியோ தவறானது எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ரஷ்ய அதிபர் புதின் இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை அளித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
