தமிழ்நாட்டில் உணவு டெலிவரி ஆப் மூலம் மது விற்பனை செய்ய அனுமதியா?
தமிழ்நாட்டில் உணவு டெலிவரி செய்யும் அப் மூலம் மது விற்பனை செய்ய அனுமதி அளித்தது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சினிமா திரைப்பட காட்சியை வைத்து மீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், "என்னடா zomato ல ஜீஸ் வாங்கிருக்க போல .. கொஞ்சம் குடேன்... என்னடா ஒரு மாதிரி இருக்கு...
அது ஜீஸ் இல்லனே சரக்கு ... இப்ப கடைக்கு எல்லாம் போக வேணாம் ஆர்டர் பண்ணா வீட்டுக்கே டெலிவராயாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவை விற்பனை செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அப்படித் திட்டமிட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஆப் மூலம் மது விற்பனை நடப்பது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு அந்த திட்டத்தை அறிவித்ததாகச் செய்தி எதுவும் வெளியாகாத சூழலில், இந்த பதிவு தவறான தகவலைப் பரப்பும் வகையில் உள்ளதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம். முதலில் தமிழ்நாடு அரசு அப்படி அறிவிப்பு வெளியிட வில்லை என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய, அறிவிப்பு, செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அரசு செய்தி வெளியீடு பிரிவு, ஊடகங்கள் என எதிலும் அப்படி ஒரு செய்தியே இல்லை.
உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive
கூகுளில் வேறு வேறு அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது சில தினங்களுக்கு முன்பு ஆங்கில ஊடகங்கள் பலவற்றிலும் ஸ்விகி, சொமோடோ, பிக் பாஸ்கெட் போன்ற ஆன்லைன் உணவுப் பொருட்கள் விநியோக செயலிகள் மூலம் மது விற்பனை செய்ய சோதனை முயற்சிகளை மேற்கொள்ள டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் ஆலோசித்து வருகின்றன என்று மொட்டையாக செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது. எதிலும் தமிழ்நாடு அரசிடம் பேசியதாகவோ, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்ததாகவோ குறிப்பிடவில்லை. இந்தியா முழுக்க உள்ள நிலை பற்றியும் ஆன்லைன் மது விற்பனையில் உள்ள நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும், நிறுவனங்களின் விருப்பம் தொடர்பாக மட்டுமே தகவல் இருந்தது. இந்த செய்தியை வைத்துக்கொண்டு வதந்தி பரவியிருப்பது தெரியவந்தது.
உண்மைப் பதிவைக் காண: dinamani.com I Archive
தொடர்ந்து தேடிய போது, "ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டம் எதுவும் இல்லை. அதோடு டெட்ரா பாக்கெட் எனப்படும் காகிதக் குடுவையின் மூலம் மதுவை அறிமுகம் செய்யவும் திட்டமிடவில்லை" என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு பத்திரிகை செய்தியில் அப்படி எந்த ஒரு பதிவும் வெளியாகவில்லை.
எனவே, டாஸ்மாக் நிறுவனத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால் உயர் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் இந்த தகவல் தவறானது என்று டாஸ்மாக் அலுவலகத்திலிருந்து நமக்கு பதில் கிடைத்தது.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
இதற்கிடையே தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் எக்ஸ் தளத்தில் இந்த தகவல் தவறானது என்று பதிவு வெளியிட்டிருந்தனர். அதில், "இது முற்றிலும் வதந்தி. அப்படி ஒரு திட்டமே இல்லை. அது தொடர்பாக பேச்சுவார்த்தை கூட நடைபெறவில்லை" என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உறுதி செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்... ஆனால் இன்றைய தேதி வரையில் தமிழ்நாட்டில் ஆன்லைனில் மது விற்பனை நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உணவு டெலிவரி ஆப் மூலம் ஆன்லைனில் மது விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது என்று பரவும் தகவல் வெறும் வதந்தி... அப்படி ஒரு திட்டமில்லை என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உறுதி செய்துள்ளார். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:தமிழ்நாட்டில் உணவு டெலிவரி ஆப் மூலம் மது விற்பனை செய்ய அனுமதியா?
Fact Check By: Chendur PandianResult: False