
“மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழகர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி” என்று உள்ளது.
இந்த பதிவை, mtiaznafil Imtiaz என்பவர் 2020 மார்ச் 1ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தந்தி டி.வி லோகோவோடு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. இதனால், இது உண்மையாக இருக்கும் என்று எண்ணி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
1) படத்தை உற்றுப் பார்க்கும்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து உள்ள பகுதி மட்டும் தனியாக சேர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது.
2) “மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும்.” என்ற வாசகம் உள்ள இடத்தில் மட்டும் பின்னணி டிசைன் இல்லை.
3) வழக்கமாக தந்தி டி.வி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்டுக்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது.
இவை எல்லாம் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, இந்த நியூஸ் கார்டை உண்மையில் தந்தி டி.வி வெளியிட்டதா, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இது தொடர்பாக ஏதும் பேசினாரா என்று ஆய்வு செய்தோம்.
தந்தி டி.வி வெளியிட்ட அசல் நியூஸ் கார்டை கண்டறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி படத்துடன் கூடிய நியூஸ் கார்டை தந்தி டிவி பிப்ரவரி 29, 2020 அன்று வெளியிட்டது தெரிந்தது. அதைப் பார்த்தபோது அதில், “அதிமுக – திமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றால் கமல்ஹாசன் வேறு நாட்டிற்குதான் செல்ல வேண்டும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி” என்று இருந்தது.
Facebook Link | Archived Link |
இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. இதை உறுதி செய்ய தந்தி டிவி சமூக ஊடகம், ஆன்லைன் பிரிவுக்கு இந்த படத்தை அனுப்பி கேட்டபோது, இது போலியானது என்று உறுதி செய்தனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுபவர்… அதனால் வேற ஏதாவது இடத்தில் இப்படி கூறினாரா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று ஆய்வு செய்தோம். கூகுளில் இது தொடர்பாக தேடியபோது ஒரு சிறு துண்டு செய்தி கூட நமக்கு கிடைக்கவில்லை.
இதன் மூலம், “மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும்” என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தந்தி டி.வி நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மார்வாடிகள் இல்லை என்றால் தமிழர்கள் பிச்சை எடுக்க நேரிடும் என்று ராஜேந்திர பாலாஜி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
