மத்திய பிரதேசத்தில் சொத்து பிரச்னை காரணமாக இரண்டு பெண்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive I Facebook I Archive

நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு எஸ் தளத்தில் வெளியான பதிவு ஒன்றின் இணைப்பை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதை திறந்து பார்த்தோம். பெண்கள் இருவர் இடுப்புக்குக் கீழே மண்ணுக்குள் மாட்டிக்கொண்டுள்ள வீடியோ இருந்தது. அவர்களை வெளியே எடுக்க மற்றவர்கள் முயற்சிப்பது போன்று தெரிகிறது. கடைசியில் அவர்கள் புதைக்கப்பட்டது போன்று தெரியும் வகையில் வெறும் தரை காட்டப்படுகிறது.

நிலைத் தகவலில், "ம.பி ரேவாவில், தனியார் நிலத்தில் சாலை அமைப்பதை எதிர்த்ததற்காக 2 பெண்கள் ரவுடிகளால் உயிருடன் புதைக்கப்பட்டனர். காண்பவர்களை உலுக்கும் இந்த வீடியோ தேசிய மகளிர் ஆணையம், பிரதமர், உள்துறை அமைச்சர், மபி முதல்வர் கல் நெஞ்சில் சிறிது கூட இரக்கம் கசிய விடாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ மற்றும் பதிவை ஃபேஸ்புக்கிலும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்திய பிரதேசத்தில் இரண்டு பெண்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டது போன்று வீடியோ உள்ளது. அவர்களது அலறல், அழுகை கேட்கிறது. சிலர் அவர்களை வெளியே எடுக்க மண்வெட்டியால் மண்ணை அகற்றுவது போல் உள்ளது. ஆனால் முழுமையாக காட்டாமல் கடைசியில் தரையை மட்டும் காட்டுகின்றனர். இதனால் பார்க்கும் போது அவர்கள் புதைக்கப்பட்டது போன்று தெரிகிறது. வீடியோ மற்றும் நிலைத் தகவலைப் பார்க்கும் போது இரண்டு பெண்கள் உயிருடன் புதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தோற்றம் அளிக்கிறது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

விடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. என்டிடிவி வெளியிட்டிருந்த செய்தியில், "இரண்டு பெண்கள் மீது மண் கொட்டி உயிருடன் புதைக்க முயன்ற டிரக்" என்று குறிப்பிட்டிருந்தனர். அதில் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive I news18.com I Archive

அதில், லாரியில் இருந்து மண்ணை வெளியே கொட்டவிடாமல் தடுக்கும் வகையில் இரண்டு பெண்கள் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது. அந்த செய்தியில், "மத்திய பிரதேசத்தில் நிலப் பிரச்னை காரணமாக இரண்டு பெண்கள் கிட்டத்தட்டப் புதைக்கப்படும் சூழலுக்கு சென்றனர். மண் லாரி மண் கொட்டியதில் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே என்ற இரண்டு பெண்களும் இடுப்பு மற்றும் கழுத்து வரை புதையுண்டனர். உள்ளூர் மக்கள் அவர்களை வெளியே எடுத்தனர். இரண்டு பெண்களும் மயக்கமுற்றதால் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மத்திய பிரதேச மாநிலம் மங்காவா காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் இரண்டு பெண்கள் தங்கள் நிலத்தில் சாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் எதிர்ப்பை மீறி லாரி ஓட்டுநர் மணலை கொட்டியதாகவும் அதில் அவர்கள் புதையுண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதில் ஒரு பெண் மயக்கமடைந்ததாகவும். இருவரையும் உடனடியாக சமூக சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து கௌகரன் பிரசாத் பாண்டே, மகேந்திர பிரசாத் பாண்டே உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்துப் பேசிய மத்திய பிரதேச மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜி ஶ்ரீஜெய்தீப் பிரசாத் கூறுகையில், "கடந்த சனிக்கிழமை ரேவா மாவட்டம் ஹினோடா கோதர் கிராமத்தில் குடும்ப நிலத் தகராறு காரணமாக ஆஷா பாண்டே மற்றும் மம்தா பாண்டே ஆகிய இரண்டு பெண்கள் மீது சிறிய சரளைக் கற்கள் கொட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். இவர்கள் யாரும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் இல்லை" என்றார்.

காவல் கண்காணிப்பாளர் (SP) Vivek Singh பேட்டி இதோ...

இந்த சம்பவம் நிலத் தகராறு காரணமாக நடந்துள்ளது. ஆனால் இந்த இரண்டு பெண்களையும் மண் தோண்டி உயிரோடு புதைக்கவில்லை. மண் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து இரண்டு பெண்களும் லாரியின் பின் பகுதியில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது லாரி டிரைவர் மண்ணை இந்த பெண்கள் மீது கொட்டியுள்ளார். இதில் அவர்கள் இடுப்பு வரை மண்ணில் மாட்டிக்கொண்டனர். இவர்கள் உயிரோடு புதைக்கப்படவில்லை. அருகிலிருந்தவர்கள் உடனடியாக இந்த பெண்களை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளது உறுதியாகிறது.

இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போதுமான விவரங்கள் இன்றி, தவறான அர்த்தம் ஏற்படும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

முடிவு:

மத்திய பிரதேசத்தில் நிலத் தகராறு காரணமாக சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது மண் கொட்டப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை பெண்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர் என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். ஆனால் அந்த பெண்கள் புதைக்கப்படவில்லை. அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது தெளிவாகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மத்திய பிரதேசத்தில் இரண்டு பெண்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்களா?

Fact Check By: Chendur Pandian

Result: Insight