
புதுச்சேரியில் மின் கம்பியில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் மின்சார ஒயரில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார் என்று கூறுகின்றனர். வீடியோவில், உயர் அழுத்த மின்சாரக் கம்பியை பிடித்தபடி ஊழியர் ஒருவர் நடந்து சென்று கம்பிகளுக்கு இடையே சிக்கியிருந்த மரக் கிளையை அகற்றுகிறார்.
நிலைத் தகவலில், “மின்சார ஒயரில் சிக்கிய மரக் கிளையை அகற்றிய மின் ஊழியர் – முதலமைச்சர் நாராயணசாமி பாராட்டு ” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Malai Murasu தொலைக்காட்சி 2020 நவம்பர் 26ம் தேதி பகிர்ந்துள்ளது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
மாலை முரசு தொலைக்காட்சி மட்டுமல்ல… ஒன் இந்தியா உள்ளிட்ட பல ஊடகங்களும், நெட்டிசன்களும் இந்த வீடியோ புதுச்சேரியில் எடுக்கப்பட்டது என்றே பகிர்ந்து வருகின்றனர்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
அதே நேரத்தில், நிவர் புயலால் காலத்தில் கடமையை செய்த தமிழக மின்சார வாரிய ஊழியர் என்று இதே வீடியோவை தமிழகத்தில் எடுக்கப்பட்டதாகவும் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மக்களை பாதிக்கும், கவனத்தை ஈர்க்கும் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதைத் தொடர்ந்து பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் மின் கம்பியில் சிக்கிய மரக் கிளையை அகற்றிய ஊழியர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில், புதுச்சேரியின் நகரப்பகுதியான உப்பளம் பகுதியில் மின் கம்பியில் மரக் கிளை மாட்டியிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மின்சார ஊழியர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி, கம்பி வழியாக நடந்து சென்று கிளையை அகற்றினார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அந்த இளைஞருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்” என்று கூறினர்.
புதுச்சேரியின் நகரப் பகுதியான உப்பளம் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த பகுதியில் வீடுகள் அதிகமாக இருக்கும். ஆனால், வீடியோவின் காட்சிகளைப் பார்க்கும் போது வயல் பகுதியில் எடுக்கப்பட்டது போல உள்ளனது. எனவே சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஃபேஸ்புக்கில் சில பதிவர்கள் 2020 ஜூன் 1ம் தேதி இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். Dw News Hyderabad என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த வீடியோ தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தது.
ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் இதே படத்தைக் கடந்த 2020 ஜூன் 2ம் தேதி வெளியிட்டிருந்தனர். அதில், “தெலங்கானாவின் நிசாம்பூரில் உயர் அழுத்த மின்சார கம்பியில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியர்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த விவரம் அடிப்படையில் தெலங்கானா, உயர் அழுத்த மின்சாரம், நிசாம்பூர் போன்ற கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது இது தொடர்பான செய்தி மற்றும் வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. கடந்த ஜூன் மாதம் இந்த வீடியோவை பல முன்னணி ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.
அசல் பதிவைக் காண: republicworld.com I Archive 1 I timesofindia I Archive 2
ஈடிவி தெலங்கானாவில் மின்சார ஒயரில் நடந்து சென்று மரக்கிளையை அகற்றிய இளைஞரின் படத்துடன் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
2020 ஜூன் மாதம் தெலங்கானாவில் எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நிவர் புயலோடு தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் பலரும் பரவி வருகின்றனர். இந்த பொய்யான தகவலை உண்மை என்று நம்பி செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊடகங்களே செய்தி வெளியிடுகின்றன என்பதால் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
நம்முடைய ஆய்வில், இந்த வீடியோ 2020 ஜூன் மாதத்திலிருந்து சமூக ஊடகங்களில், செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை உறுதி செய்துள்ளோம்.
இந்த வீடியோ தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்பதும் உறுதியாகி உள்ளது.
இதன் அடிப்படையில் புதுச்சேரியில் மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய மின்சார ஊழியர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
புதுச்சேரியில் மின்சார ஒயரில் தொங்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியர் என்று பகிரப்படும் வீடியோ தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:புதுச்சேரியில் மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய மின் ஊழியர்- வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
