டைனோசர் இனம் இன்னும் உயிரோடு வாழ்கிறது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

"டைனோசர் இனங்கள் அழிந்து விட்டது என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்... ஆனால் இன்னும் உயிருடன் வாழும் டைனோசர்.. இணையதளங்களில் வைரல் வீடியோ" என்று இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அசல் பதிவைக் காண: online14media.com I Archive

இந்த செய்தியை Sai Pallavi - Malar என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 ஜனவரி 12ம் தேதி வெளியிட்டுள்ளது. பல பக்கங்களில் இதே செய்தி பகிரப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:

டைனோசர் இனம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டது. ஆனால் தற்போதும் அது வாழ்ந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. வழக்கமாக தங்கள் இணையதள, சமூக ஊடக பக்கங்களில் அதிக லைக், ஷேர் கிடைக்க இப்படி பொய்யான செய்திகளைப் பரப்புவது வழக்கம்தான். இதில், வீடியோவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

திரைப்பட, அனிமேஷன் காட்சி ஏதாவது பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இணைப்பை கிளிக் செய்து அந்த பக்கத்துக்கு சென்றோம். அதில், MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 டிசம்பர் 15ம் தேதி வெளியிட்ட வீடியோ பகிரப்பட்டிருந்தது. அந்த பதிவில் இந்தோனேஷியாவில் டைனோசர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Archive 1 I Archive 2

வீடியோவைப் பார்த்தோம். இயந்திர பொம்மை அல்லது மனிதர்கள் உள்ளே இருந்து இயக்கும் வகையிலான டைனோசர் போல இருந்தது. வாகனத்திலிருந்து அதை இறக்குகின்றனர். எனவே, இந்த வீடியோ எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவாஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த டைனோசர் வீடியோ தொடர்பாக பல உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு நாம் நம்முடைய வழியில் நம்முடைய ஆய்வைத் தொடங்கினோம்.

இந்தோனேஷிய மொழியில் பல செய்திகள் இந்த வீடியோ தொடர்பாக வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் மொழிமாற்றம் செய்து அவற்றைப் பார்த்தோம். sonora.id என்ற இணையதளத்தில் வெளியான செய்தி தெளிவானதாக இருந்தது.

அசல் பதிவைக் காண: sonora.id I Archive

அதில் Mojosemi Forest Park என்ற சுற்றுலா பொழுதுபோக்கு பூங்காவில் இந்த டைனோசர் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. பூங்காவின் மேலாளர் நானாங் செடாயு "இந்த வீடியோ 2020 டிசம்பர் 15ம் தேதி எடுக்கப்பட்டது. பூங்காவின் விளம்பரத்தின் ஒரு பகுதியாக இந்த வீடியோ எடுக்கப்பட்டது. இந்த பூங்காவில் 15- 20 வகையான டைனோசர் உள்ளது.

இந்த டைனோசர் 2019ம் ஆண்டு இறுதியிலேயே தயாராகிவிட்டன. கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்கள் பெரிய அளவில் வரவில்லை. தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டோம் என்று நம்புகிறோம். எனவே, இந்த பூங்கா தொடர்பாக பப்ளிசிட்டி செய்து வருகிறோம்.

இந்த டைனோசர்கள் பார்க்க உண்மையானது போல இருக்க வேண்டும் என்று கடும் முயற்சிகள் எடுத்தோம். உயிரோடு உள்ளது போலவே இவை தயாரிக்கப்பட்டன. வெளிநாட்டில் இருந்தோ, ஜுராசிக் பார்க் படத்தில் வேலை செய்தவர்களிடமிருந்தோ இந்த டைனோசர் இறக்குமதி செய்யப்படவில்லை. இந்தோனேஷியாவிலேயே இந்த டைனோசர்கள் தயாரிக்கப்பட்டன. கடந்த காலத்தில் பல பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்தோம். அந்த படிப்பினையை அடிப்படையாகக் கொண்டு இவற்றை நாங்களே தயாரித்தோம்" என்று கூறியிருந்தார்.

https://twitter.com/magetanbanget/status/1338407632248311808

Archive

All About Magetan என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோக்களையும் அதில் ஷேர் செய்திருந்தனர். டைனோசர் தொடர்பான வீடியோ முதன் முதலில் இந்த ட்விட்டர் அக்கவுண்டில் இருந்துதான் பதிவேற்றம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அவற்றில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்ற டைனோசர் உள்ளே இருந்து மனிதர்கள் வெளியே வரும் காட்சியும் இருந்தது.

https://twitter.com/magetanbanget/status/1338407632248311808

Archive

மேலும் வாகனத்தில் இருந்து அந்த டைனோசர் இறக்கப்படும் வீடியோவின் மற்றொரு காட்சியும் கிடைத்தது. அதில், Mojosemi Forest Park என்பது தெளிவாகத் தெரிந்தது. இதன் மூலம், பொம்மை டைனோசர் பொழுதுபோக்கு பூங்காவின் விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து, டைனோசர் உயிரோடு உள்ளது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

போலியான பொம்மை டைனோசர் வீடியோவை அசல் டைனோசர் உயிரோடு வாழ்கிறது என்று சமூக ஊடகங்களில் பரப்புவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:டைனோசர் வாழ்வதாக துணிந்து பொய் சொன்ன இணையதளம்!

Fact Check By: Chendur Pandian

Result: False