‘’திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில் கிடைத்த தகவல்களை கீழே இணைத்துள்ளோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போல உண்மையில், திருச்சி விமான நிலையம் தனியாருக்குச் சொந்தமானதா என்ற சந்தேகத்தில் தகவல் தேட தொடங்கினோம்.

இதன்படி, திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானது இல்லை. மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்தான் திருச்சி விமான நிலையத்தின் உரிமையாளர். மத்திய அரசின் சார்பாக, AAI எனப்படும் ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியா, திருச்சி விமான நிலையத்தை நிர்வகித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு தேவையான இட ஒதுக்கீடு செய்வது, பராமரிப்புப் பணிகளில் உதவுவது உள்ளிட்டவற்றை தமிழக அரசுதான் செய்துதருகிறது. மற்றபடி இதில் முழு உரிமையாளர் தமிழக அரசு என்று கூறிவிட முடியாது.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உள்ளன. இவற்றில் சில விமான நிலையத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில், திருச்சி விமான நிலையமும் ஒன்று. இதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Livemint LinkArchived Link

தற்போதைய சூழலில் அதானி குழுமம் திருச்சி விமான நிலையத்தை நிர்வகிக்கும் பணியை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. எனினும், இந்த செய்தி பதிவேற்றும் நொடி வரையிலும் திருச்சி விமான நிலையம், பொதுத்துறையின் கீழ் வரும் AAI கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

Airport-technology Link

எனவே, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி விமான நிலையத்தை தனியார்மயப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பது தெளிவாகிறது. அதேசமயம், இந்த விமான நிலையம் இதுநாள் வரை தமிழக அரசுக்குச் சொந்தமாக இருந்தது என்ற தகவல் தவறாகும்.

அத்துடன், தனியார் மயம் என்றால் யாரோ ஒரு தனிநபருக்குச் சொந்தமானதாக விமான நிலையம் மொத்தமும் மாற வாய்ப்பில்லை. அதிலும் மத்திய அரசின் வசம் கணிசமான பங்குகள், தலையீடு, பாதுகாப்பு பணிகள் போன்றவை இருக்கவே செய்யும். உதாரணமாக, தனியார் வசம் உள்ள ஐதராபாத் விமான நிலையத்தில் இன்றளவும் மத்திய அரசு (AAI) ஒரு பங்குதாரராகவே உள்ளது.

அதுபோலவே, திருச்சி விமான நிலையத்தையும், PPP (அரசு – தனியார் ஒப்பந்த அடிப்படையில்) என்ற முறையில் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, விற்பனை செய்யப்படும் விமான நிலையத்தின் கணிசமான பங்குகளை மத்திய அரசின் AAI, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் இதர பெரும்பான்மையான பங்குகளை அதானி, ஜிஎம்ஆர் போன்ற தனியார் நிறுவனங்களும் நிர்வகிக்கும். இதுதான் PPP முறையின் பொதுவான அம்சம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, சமூக அக்கறையின் பேரில் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தெளிவான தகவல் இல்லை என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான தகவல்களின் முழு உண்மை அறிய விரும்பினால், (+91 9049044263) என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா? உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer

Result: Partly False