இயக்குனர் மோகனை விமர்சித்த கவுதம் வாசுதேவ் மேனன்- போலிச் செய்தியால் சர்ச்சை
‘’இயக்குனர் மோகனை கவுதம் வாசுதேவ் மேனன் விமர்சித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இந்த பதிவில், இயக்குனர் மோகன், சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட குறும்படம் ஒன்றை பற்றி விமர்சித்ததைப் போலவும், அதற்கு கவுதம் பதில் கூறியதாகவும் ஒரு ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில், சிம்பு, திரிஷா நடிப்பில், கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த குறும்படம் பல தரப்பிலும் பாராட்டு பெற்றது. அதேசமயம், சிலரால் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இந்த குறும்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குறும்படத்தின் கதையை விமர்சித்து, இயக்குனர் மோகன் ஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு கவுதம் வாசுதேவ் மேனன் பதிலடி கொடுத்துள்ளது போல மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் ஸ்கிரின்ஷாட் இணைத்துள்ளனர். ஆனால், அது உண்மையானது இல்லை. சம்பந்தப்பட்ட ஸ்கிரின்ஷாட்டை உற்று கவனித்தால், கவுதம் வாசுதேவ் மேனனின் ட்விட்டர் பக்கத்தையும், மோகனின் பேஸ்புக் பதிவையும் இணைத்துள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது.
ஏனெனில், கவுதம் வாசுதேவ் மேனனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இது கிடையாது. அத்துடன், அவரது ட்விட்டர் பக்கத்தில், மே 20ம் தேதிக்குப் பிறகு வேறு எந்த பதிவும் வெளியாகவில்லை. அவர் மோகன் பற்றியும் விமர்சிக்கவில்லை.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கவுதம் பெயரில் சிலர் இத்தகைய போலிச் செய்தியை தயாரித்து வெளியிட்டுள்ளனர் என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய சந்தேகத்திற்கு இடமான தகவல்களை எங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்புங்கள்.
Title:இயக்குனர் மோகனை விமர்சித்த கவுதம் வாசுதேவ் மேனன்- போலிச் செய்தியால் சர்ச்சை
Fact Check By: Pankaj IyerResult: False