‘’மட்டன், சிக்கன் போன்ற இறைச்சிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link

இந்த பதிவில், ஒரு விளம்பர அறிவிக்கை போன்ற ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், ‘’மட்டன் சிக்கன் இறைச்சிகளுக்கு அரசால் விலை நிர்ணயம். மட்டன் ரூ.550 (ஒரு கிலோ), சிக்கன் ரூ.200 (ஒரு கிலோ). இன்று முதல் இறைச்சி கடைகளுக்கு மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்டு, இயங்கி வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி இறைச்சிகளை வாங்கிக் கொள்ளலாம். நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு அதிகமாக இறைச்சிக்கள் விற்கப்பட்டால் கீழ்க்கண்ட செல் எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். 7824058411,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். நமது வாசகர்கள் கூட இதுபற்றி வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவித்து, உண்மை கண்டறியும்படி கேட்டுக் கொண்டனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் கூறியுள்ளது போல, இறைச்சிக்கு ஏதேனும் விலை நிர்ணயம் செய்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதா என தகவல் தேடினோம். நமக்கு தெரிந்த ஊடக நண்பர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் இதுபற்றி கேட்டோம். பலரும் இப்படி எந்த செய்தியையும் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றனர்.

இதையடுத்து, மேற்குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள செல்பேசி எண்ணை (7824058411) தொடர்பு கொண்டு பேசினோம். மறுமுனையில் பேசிய நபர், ‘’நான் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறேன். அரசால் எனக்கு வழங்கப்பட்ட செல்பேசி எண்ணை (7824058411) சிலர் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் பரப்பி, இறைச்சி விற்பனை விலை பற்றி புகார் பெறும் அதிகாரி எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனால், எனக்கு தினசரி பலர் ஃபோன் செய்து தொல்லை தருகின்றனர். இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளேன்,’’ எனத் தெரிவித்தார்.

அவரது போலீஸ் புகார் நகல் கீழே ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.

இதனை உண்மை என நம்பி பலர் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட இறைச்சிக் கடைகளில் விலை நிர்ணயத்தை மேற்கோள் காட்டி தகராறு செய்துள்ளனர். இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

Dinamani LinkArchived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்:-

1) கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் இந்த தகவலை உருவாக்கி பகிர்ந்துள்ளனர்.
2) இறைச்சிக்கு விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
3) இதில் இருக்கும் செல்பேசி எண், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலருடையதாகும். அவர் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளார்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை காண நேரிட்டால், +91 9049044263 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:தமிழக அரசு மட்டன், சிக்கனுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதா?- விஷமத்தனமான வதந்தி!

Fact Check By: Pankaj Iyer

Result: False