
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்” என்று உள்ளது. நிலைத் தகவலில், “திமுகவை புறக்கணிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை சோழன் மீம்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மார்ச் 15 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரித்து உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7 சதவீதமும், எஞ்சிய பிரிவினருக்கு 2.5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய முதல்வர் பழனிசாமி, “6 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். அப்போது இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும்” எனக் கூறியிருந்தார்.
அசல் பதிவைக் காண: kalaignarseithigal.com I Archive 1 I dailythanthi.com I Archive 2
இந்த நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலின் போது தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். அப்படி இருக்கும்போது வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறுவாரா என்று சந்தேகத்துடன் ஆய்வைத் தொடங்கினோம்.
இந்த நியூஸ் கார்டு உண்மையானது இல்லை என்பது பார்க்கும்போதே தெரிந்தது. வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்டுக்கும் இதற்கும் வித்தியாசம் இருந்தது. எனவே, நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தபோது இது அவர்கள் வெளியிட்டது இல்லை என்பது உறுதியானது. இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவிடம் கேட்ட போது, இது போலியானது என்பதை அவரும் உறுதி செய்தார்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். எந்த ஒரு ஊடகத்திலும் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று செய்தி எதையும் வெளியிடவில்லை என்பதைக் காண முடிந்தது.
தி.மு.க தேர்தல் அறிக்கையை எடுத்துப் பார்த்தோம். தி.மு.க இணையதளத்தில் தேர்தல் அறிக்கையை வைத்துள்ளார்கள். அதில் இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என சாதி, இட ஒதுக்கீடு தொடர்பான பகுதிகளில் பார்த்தபோது, வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடவில்லை. தி.மு.க தேர்தல் அறிக்கையில் வன்னியர் உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
அசல் பதிவைக் காண: dmk.in I Archive
இதன் மூலம் வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது, தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திமுக தேர்தல் அறிக்கையில் வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என குறிப்பிட்டதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா?
Fact Check By: Chendur PandianResult: Altered
