FACT CHECK: நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்; எதிர்த்தாரா நாராயணன் திருப்பதி?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற தி.மு.க அரசின் அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி கண்டித்து ட்வீட் பதிவு வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட ட்வீட் என்றின் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “இப்பொழுதெல்லாம் யார் பேருந்தில் பயணம் செய்கிறார்கள், கடந்த 10 வருட காலத்தில் மக்கள் தரம் உயர்ந்து, பெண்களே இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர், அவர்களை மீண்டும் பஸ்ஸில் பயணம் செய்ய வைத்து அவர்களை பின்னுக்கு தள்ளுகிறது இந்த அரசு. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று இருந்தது. 

இந்த பதிவை Sheik Abdul Kadar என்பவர் 2021 மே 10 அன்று பதிவிட்டிருந்தார். இவரைப் போல ஏராளமானோர் இந்த ட்வீட் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு உள்ள சூழலில் இந்த திட்டத்தை பா.ஜ.க எதிர்ப்பது போன்று ட்வீட் பதிவு பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இதை பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதிதான் வெளியிட்டாரா என்று ஆய்வு செய்தோம். அவருடைய ட்விட்டர் பக்கத்தை முதலில் ஆய்வு செய்தோம். அப்போது அவருடைய பக்கத்தில் இந்த பதிவு இல்லை. அதே நேரத்தில் தன்னுடைய பெயரில் போலியாக ட்வீட் பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது என்று அவர் வெளியிட்ட பதிவு கிடைத்தது. அதன் அடிப்படையில் அவருடைய பெயரில் இயங்கும் போலியான ட்வீட் கணக்கை தேடினோம்.

Archive

அசல் பதிவைக் காண: Twitter I Archive

அப்போது நாராயணன் திருப்பதி பெயரில் மற்றொரு ட்விட்டர் கணக்கு இருப்பது தெரிந்தது. அதில் தேடிய போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது ட்வீட் அதிலிருந்தது. மேலும், இந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்று நாராயணன் திருப்பதி வெளியிட்டிருந்த ட்வீட் பதிவையும் அவர்கள் டேக் செய்து வைத்திருந்தனர். 

அசல் பதிவைக் காண: Twitter I Archive

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியின் ட்வீட்டர் கணக்கு @Narayanan3 என்று இருக்கும். அவர் பெயர் ஆங்கிலத்தில் Narayanan Thirupathy என்று இருக்கும். போலியான ட்விட்டர் கணக்கின் முகவரி @narayatirupati என்றும் ஆங்கிலத்தில் பெயர் Narayanan Tirupati என்றும் உள்ளது. அதே நேரத்தில் இரண்டின் டி.பி இமேஜ், கவர் இமேஜ் ஒன்றாக உள்ளது. இந்த போலியான ட்விட்டர் பக்கத்தில் நாராயணன் திருப்பதிக்கு எதிராகப் பல பதிவுகள் வெளியாகி இருந்தன. இது போலியான கணக்கு என்று தெரிந்தோ, தெரியாமலோ பலரும் இந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்து வருவது தெரிந்தது.

நம்முடைய ஆய்வில், பெண்கள் அரசு பஸ்ஸில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை விமர்சித்தது நாராயணன் திருப்பதி இல்லை என்பது உறுதியாகி உள்ளது. அவருடைய பெயரில் உள்ள போலியான ட்வீட் கணக்கிலிருந்து இந்த பதிவு வெளியாகி உள்ளது. இந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்று நாராயணன் திருப்பதி உறுதி செய்துள்ளார். இதன் அடிப்படையில், பெண்கள் பஸ்ஸில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவிப்புக்கு பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்தார் என்று பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழக அரசின் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற உத்தரவை தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எதிர்த்தது போன்று பரவும் ட்வீட் பதிவு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்; எதிர்த்தாரா நாராயணன் திருப்பதி?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •