
‘’1250 கோடி வீடுகள் கட்டித் தருவோம்- மோடி ஜி வாக்குறுதி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த பதிவில், மோடியின் புகைப்படத்தையும், தமிழ் சினிமா நகைச்சுவை காட்சி ஒன்றையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். ஜூன் 12ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பதிவில்,1250 கோடி இந்தியர்களுக்கு வீடு கட்டித் தருவேன் என்று மோடி சொன்னதாகக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, உண்மையான ஒன்றா என அறிவதற்காக முதலில் கூகுள் சென்று ஆதாரம் தேடினோம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே இது தவறான தகவல் என்றும் இதுதொடர்பாக பலரும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர் என்றும் தெரியவந்தது.

இதன்படி, 2018ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, ராய்பரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது, தனது ஆட்சியில் இதுவரையிலும், 1.25 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டித் தந்துள்ளோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், அவர் பேசியதை என்டிடிவி உள்ளிட்ட பல்வேறு இந்திய ஊடகங்களும் தவறான அர்த்தத்தில் 1250 வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம் என்று மோடி சொன்னதாகக் கூறி, செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
Archived Link
இதனை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்த நிலையில், என்டிடிவி தனது தவறை திருத்திக் கொண்டு, அது 1.25 கோடி வீடுகள் என்று கூறி, மீண்டும் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது. அந்த பதிவும் கீழே தரப்பட்டுள்ளது.
உண்மை இப்படியிருக்க, நமது ஃபேஸ்புக் பதிவர் தவறாக அர்த்தம் புரிந்துகொண்டு, 1250 கோடி வீடுகளை மோடி கட்டி தருவதாகச் சொன்னார் என கூறி, தகவல் பகிர்ந்துள்ளார். எனவே இது தவறான தகவல் என முடிவு செய்யப்படுகிறது.
இதுபற்றி இந்தியா டுடே உண்மை கண்டறியும் சோதனை நடத்தி வெளியிட்டுள்ள முடிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:1250 கோடி வீடுகள் கட்டித் தருவோம் என்று மோடி வாக்குறுதி அளித்தாரா?
Fact Check By: Parthiban SResult: False
