கோவையில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் இந்து தமிழர் கட்சி: போலி புகைப்படங்களால் சர்ச்சை
‘’கோவையில் இல்லந்தோறும் இலவச ஐந்து குடம் குடிநீர் வழங்கும் திட்டம்,’’ என்ற பெயரில் போலியான புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வைரலாகி பரவி வருகின்றன. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இரா. ராஜேஷ் காவிபுரட்சியாளன் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், லாரிகளின் புகைப்படத்தை பகிர்ந்து, அவற்றின் மேலேயே ஃபோட்டோஷாப் என தெளிவாக தெரியும் வகையில், தகவல் பரப்பியுள்ளனர். இதனை பார்க்கும்போதே ஃபோட்டோஷாப் என தெரிந்தாலும், உணர்ச்சியின் பெயரில் பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவை வெளியிட்டுள்ள நபர், ‘’ கோவையில்இல்லந்தோறும் இலவச ஐந்து குடம் குடிநீர் வழங்கும் திட்டம்- #இந்துதமிழர்கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். ****************குடிநீர் பஞ்சம் போக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட இந்து தமிழர் கட்சி சார்பில் கோயம்புத்தூரில் ஏற்பாடுகள் செய்து வரும் இருந்து இந்து தமிழர் கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். #இராம_இரவிக்குமார் #நிறுவன_தலைவர் #இந்துதமிழர்கட்சி 86430-81430 96553-65696,’’ என்று எழுதியுள்ளார்.
ஆனால், இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அப்பட்டமாக, ஃபோட்டோஷாப் என தெளிவாக தெரியும்படி உள்ளன.
இதே புகைப்படத்தை சற்று இடது, வலது திருத்தம் செய்து, மீண்டும் வேறொரு புகைப்படம்போல பகிர்ந்துள்ளனர். ஆனால், ரெண்டு புகைப்படங்களுமே ஒரே லாரிதான். அதன் உள்ளே அமர்ந்திருக்கும் நபர்கூட இடம்மாறாமல் அப்படியே இருப்பார். மேலும், இவர்கள் ஃபோட்டோஷாப் செய்திருக்கும் பகுதியை உற்று கவனித்தால் லாரி டேங்கரை கடந்து, அதில் உள்ள வாசகங்கள் நீண்டு செல்வது எளிதாக தெரியும்.
இது மட்டுமில்ல, உச்சக்கட்டமாக, 3வது புகைப்படம் ஒன்று உள்ளது. அதைப் பார்த்தீர்கள் என்றால், அவ்வளவுதான். ஒரு லாரியின் பின்பகுதியை படம்பிடித்து, அதில் உள்ள ஏணியைக் கூட மறைத்துவிட்டு ஃபோட்டோஷாப் செய்துள்ளனர். ஆனால், ஏணி முழுதாக மறையாமல் மேலும், கீழும் தெளிவாக தெரிகிறது.
ஃபோட்டோஷாப் செய்ய தெரியாமல் தவறான வகையில் புகைப்படங்களை சித்தரித்து வெளியிட்டதன் மூலமாக, அந்த பதிவரே சர்ச்சையில் சிக்கியுள்ளார். அத்துடன், அவரே தனது தவறை கமெண்ட்களின் மூலமாக ஒப்புக் கொண்டுவிட்டார். அதாவது, இது மாதிரி வரைபடம் என்றும், விரைவில் திட்டம் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இதைப் பார்த்தால் இது மாதிரி வரைபடம் போல இல்லை. ஒரு மாதிரியான வரைபடம் என்றே தோன்றுகிறது.
இதேபோல, மற்றொரு கமெண்ட்டிலும் தனது தவறை திருத்திக் கொள்ளாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போலவே, இந்த பதிவர் செயல்படுகிறார். அதாவது, தனது பதிவு தவறு என தெரிந்தும், அவர் தொடர்ந்து, கமெண்ட் போடுவோரிடமும் மல்லுக்கு நிற்கிறார். சிம்பிளாக, தனது பதிவை டெலிட் செய்துவிட்டு அவர் கிளம்பியிருந்தால், எந்த பிரச்னையும் இல்லை. அதைச் செய்யாமல் மாறி மாறி, தனது வரைபடம் மட்டுமே இது என்றும், இன்னும் இப்படி திட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்றுமே அவர் குறிப்பிடுகிறார்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு ஃபோட்டோஷாப் செய்த ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:கோவையில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் இந்து தமிழர் கட்சி: போலி புகைப்படங்களால் சர்ச்சை
Fact Check By: Parthiban SResult: False