மலப்புரம் கலெக்டராக இந்து ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் கலெக்டராக இந்து ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமியர்கள் பேரணியாகச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. மலையாளத்தில் கோஷம் எழுப்புகின்றனர். நிலைத் தகவலில், “கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தினுடைய மாவட்ட கலெக்டராக ஹிந்துவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் …!!

இனிமேலாவது தமிழகத்தில் உள்ள இந்துக்களுக்கு உணர்வு வர வேண்டுமே…!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை A J Surya என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஆகஸ்ட் 2ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் ஆட்சியராக இந்து ஒருவர் நியமிக்கப்பட்டதால் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கேரள மாநிலத்தில் ஆட்சியர்கள் மாற்றம் நடந்ததா, மலப்புரம் ஆட்சியராக இந்து ஒருவர் நியமிக்கப்பட்டாரா என்று பார்த்தோம்.

மலப்புரம் ஆட்சியராக வி.ஆர்.பிரேம்குமார் என்பவர் உள்ளார் என்று தெரிந்தது. அவர் எப்போது கலெக்டராக பொறுப்பேற்றார் என்று பார்த்தோம். 2021 செப்டம்பரில் அவர் மலப்புரம் கலெக்டராக பொறுப்பேற்றார் என்று செய்தி கிடைத்தது. அவருக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் என்பவர் கலெக்டராக இருந்தார் என்றும் செய்தி கிடைத்தது. இதற்கு முன்பு மலப்புரம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தவர்கள் பட்டியலை பார்த்தோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் ஆட்சியர்களாக இருந்திருப்பது தெரிந்தது. அப்படி இருக்கும் போது புதிதாக இந்து ஒருவர் ஆட்சியராக நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive

இது தொடர்பாக கூகுளில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, ஆலப்புழை மாவட்டத்தின் ஆட்சியராக ஶ்ரீராம் வெங்கட்ராமன் என்பவர் நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்ற செய்தி கிடைத்தது. கடந்த ஜூலை 26, 2022 அன்று ஶ்ரீராம் வெங்கட்ராமன் ஆலப்புழை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவரை மாற்றக்கோரி இஸ்லாமியர்கள் பல இடங்களில் பேரணி நடத்தினர். அந்த வகையில் மலப்புரத்திலும் பேரணி நடந்தது என்று செய்திகள் கிடைத்தன. 

2019ம் ஆண்டு ஶ்ரீராம் வெங்கட்ராமன் மது போதையில் கார் ஓட்டியதில் பஷீர் என்ற பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஶ்ரீராம் வெங்கட்ராமன் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியது, ஆதாரங்களை அழிக்க முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. 

பத்திரிக்கையாளர் பஷீர் கேரள முஸ்லிம் ஜமாத் தொடர்புடைய பத்திரிக்கையான சிராஜ்ஜில் பணியாற்றியவர். இதனால், பஷீர் கொலைக்குக் காரணமான ஶ்ரீராம் வெங்கட்ராமை ஆலப்புழை மாவட்டத்தின் ஆட்சியராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்ததாகவும், அதன் அடிப்படையில் போராட்டங்கள் நடந்தன என்றும் செய்திகள் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து ஶ்ரீராம் வெங்கட்ராமன் ஆலப்புழை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, அவர் நுகர்பொருள் வாணிப கழகத்தின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார் என்றும் செய்தி கிடைத்தது.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் கேரள முஸ்லிம் ஜமாத் மாநிலச் செயலாளர் வன்டூர் அப்துல் ரஹ்மான் ஃபயாசியிடம் இது குறித்து பேசப்பட்டது. அப்போது அவர், “ஶ்ரீராம் வெங்கட்ராமனை ஆலப்புழை மாவட்ட ஆட்சியராக நியமித்த அரசின் முடிவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்பட்டது. ஶ்ரீராம் வெங்கட்ராமனின் மதம் மற்றும் சாதி காரணமாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டம் மலப்புரத்தில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. 2019ம் ஆண்டு ஶ்ரீராம் வெங்கட்ராமன் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் பஷீர் என்ற செய்தியாளர் உயிரிழந்தார். அந்த காரை ஓட்டியது ஶ்ரீராம் வெங்கட்ராமன். அதனால் அவரை ஆட்சியராக நியமிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினோம்” என்று கூறினார்.

இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

மலப்புரம் ஆட்சியராக இந்து நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது. அந்த மாவட்டத்தின் ஆட்சியராக தற்போதும் ஒரு இந்துதான் உள்ளார். அவருக்கு முன்பும் இந்துக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் ஆட்சியராக இருந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீராம் வெங்கட்ராமன் என்பவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் மலப்புரம் ஆட்சியராக நியமிக்கப்படவில்லை. அவர் ஆலப்புழை மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 

ஶ்ரீராம் வெங்கட்ராமனின் மதம் காரணமாக எதிர்ப்பு எழவில்லை. அவர் முன்பு ஏற்படுத்திய ஒரு விபத்து மற்றும் அதன் காரணமாக பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததால் இந்த போராட்டம் நடந்தது என்று போராட்டத்தை நடத்தியவர்கள் நம்மிடம் தெரிவித்துள்ளனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கேரளாவில் மலப்புரம் மாவட்ட ஆட்சியராக இந்து மதத்தைச் சார்ந்தவர் நியமிக்கப்பட்டதால் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று பரவும் தகவல் விஷமத்தனமானது தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மலப்புரம் கலெக்டராக இந்து ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False