குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதித்தாரா திரௌபதி முர்மு?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு திரௌபதி முர்மு தடை விதித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்று சிலர் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். 

ஆங்கிலத்தில் பரவும் புகைப்பட பதிவை தமிழாக்கம் செய்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். kishore k swamy என்ற ட்விட்டர் ஐடி கொண்ட நபர் 2022 ஆகஸ்ட் 2ம் தேதி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ராஷ்ட்ரபதி பவனில் அசைவ உணவிற்கு தடை விதித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு . தினமும் காலை 4 மணி பிரம்ம முகூர்த்தத்தில் தானே சிவ பூஜை ஆரத்தியை எடுத்து நாளை துவங்குவார் என்றும் ராஷ்டிரபதி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் . ஆமாம் இது ஹிந்து தேசம் தான்” என்று பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த ட்வீட் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சிலர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். Saravanan Dhuarisamy என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஆகஸ்ட் 2ம் தேதி இதை பதிவிட்டுள்ளார். இவர்களைப் போல பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்துக்கள் என்றால் அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள் என்பது போன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்துக்கள் அசைவ உணவு சாப்பிடுவார்களா, இல்லையா என்ற சர்ச்சைக்குள் செல்லவில்லை. குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவு கூடாது என்று திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்தாரா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

இப்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஏதும் உத்தரவு, செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக ஊடக பக்கங்களிலும் இப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

அதே நேரத்தில் அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்த திரௌபதி முர்மு பின்னர் சைவ உணவு உட்கொள்பவராக மாறிவிட்டார். அதுவும் வெங்காயம், பூண்டு கூட சேர்த்துக்கொள்ளாத சாத்விக் உணவு உட்கொள்பவராக உள்ளார் என்று செய்திகள் கிடைத்தன. 

தொடர்ந்து தேடிய போது மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “குடியரசுத் தலைவர் மாளிகையில் எல்லா விதமான அசை உணவு அல்லது பானங்களுக்கும் முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பரவும் தகவல் தவறானது. இது போன்று எந்த ஒரு மாற்றத்தையும் குடியரசுத் தலைவர் மாளிகை மேற்கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டிருந்தது.

Archive

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த ஆதாரம் அடிப்படையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு திரௌபதி முர்மு தடை விதித்துள்ளார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு திரௌபதி முர்மு தடை விதித்தார் என்று பரவும் தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதித்தாரா திரௌபதி முர்மு?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply