
மணிப்பூரில் உள்ள ஒரு மசூதியில் சிக்கிய ஆயுதங்கள் மற்றும் ரொக்கம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஏராளமான ஆயுதங்கள் மற்றும் கட்டுக்கட்டாக பணத்தைக் கைப்பற்றி காட்சிப்படுத்திய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மணிப்பூர் மசூதியில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் ரூபாய் குவியல்கள்.! புரியவில்லையே! அல்லா மாலிக்! இன்ஷா அல்லா!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மணிப்பூரில் ஒரு மசூதியிலிருந்து ஏராளமான பயங்கர ஆயுதங்கள் மற்றும் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். கட்டுக்கட்டாக உள்ள பணம் பார்க்கும் போது, அவை இந்திய ரூபாய் நோட்டுக்கள் போல இல்லை. மேலும் மணிப்பூர் மசூதியிலிருந்து ஆயுதங்கள் மற்றும் பல கோடி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சமீபத்தில் எந்த செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கடந்த ஏப்ரலிலிருந்து பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதை காண முடிந்தது. அவற்றுக்கு இடையே மியான்மர் (பர்மிஸ்) மொழியில் ஒரு பதிவு நமக்குக் கிடைத்தது.
அதை மொழிமாற்றம் செய்து பார்த்த போது “ஃபாலம் (Falam) நகரை மீட்க நடந்த போரில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் மற்றும் பணம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஃபாலம் நகர் எங்குள்ளது என்று தேடிப் பார்த்த போது அது மியான்மர் நாட்டில் இருப்பது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடிய போது பர்மா நேஷனல் ரெவல்யூஷனரி ஆர்மியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சிகளுடன் கூட பதிவு வெளியாகி இருந்தது. பர்மா நேஷனல் ரெவல்யூஷனரி ஆர்மி என்பது அந்த நாட்டில் செயல்படும் போராளிக் குழு என்று செய்திகள் தெரிவித்தன.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள ராணுவ வீரர் ஒருவரின் சட்டையில் BNRA என்று இருந்தது. அது என்ன என்று தேடிப் பார்த்த போது, Burma National Revolutionary Army – BNRA என்று செய்திகள் நமக்குக் கிடைத்தன. அவரது சட்டையில் இருந்த லோகோவும் பிஎன்ஆர்ஏ லோகோவும் ஒன்றாக இருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ மணிப்பூரைச் சார்ந்தது இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
மியான்மர் நாட்டில் போராளி குழு ஒன்று ஆயுதங்கள் மற்றும் கட்டுக்கட்டாக பணத்தைக் கைப்பற்றிய வீடியோவை இந்தியாவில் மணிப்பூரில் உள்ள மசூதியில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மணிப்பூர் மசூதியில் சிக்கிய ஆயுதங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
