ஆளுநர் ரவி மற்றும் சனாதன கொள்கைகளை பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி விமர்சித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், "ஆளுநருக்கு எவ்வளவு திமிர்... எவ்வளவு கொழுப்பு... நான் சவால்விடுகிறேன்... ஆளுநருக்கு தைரியம் இருந்தால், தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றிபெற முடியுமா... உங்கள் கொள்கைகளை எடுத்துச் சென்றால் தமிழக மக்கள் உங்களை செருப்பால் அடிப்பாங்க" என்று கூறுகிறார்.

Archive

நிலைத் தகவலில், "RSS ரவியையும், சனாதன கொள்கைகளையும் கிழித்து தொங்கவிட்ட பாஜக நிர்வாகி.." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை ஒன்றிய தமிழன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் பதிவிட்டுள்ளார். Er.NithanKrish B.E., @iam_nithankrish என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நீட் தேர்வு ரத்துக்கு எதிராக செயல்படும் பாரதிய ஜனதாவின் மத்திய ஆட்சி மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநருக்கு சவால் விடும் வகையில் பேசியிருந்தார். உதயநிதி கூறியதை எல்லாம் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுவது போன்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

பாஜக-வுக்கு எதிராக நாராயணன் திருப்பதி பேச வாய்ப்பே இல்லை. முன்பு இப்படி திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்தை அப்படியே பதிவிட்டு அதற்கு தன்னுடைய கருத்தை நாராயணன் திருப்பதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்தை மட்டும் எடுத்து நாராயணன் திருப்பதி பாஜக-வுக்கு எதிரான கருத்தை கூறினார் என்று வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். எனவே, அது போல அவருடைய பேச்சை எடிட் செய்து வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

Archive

நாராயணன் திருப்பதியின் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை அவர் வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால் அதில், "ஆளுநருக்கு எவ்வளவு திமிர்... எவ்வளவு கொழுப்பு... நான் சவால்விடுகிறேன்... ஆளுநருக்கு தைரியம் இருந்தால், தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றிபெற முடியுமா... உங்கள் கொள்கைகளை எடுத்துச் சென்றால் தமிழக மக்கள் உங்களை செருப்பால் அடிப்பாங்க அப்படின்னு சாதாரண மேடைப் பேச்சாளர், மூன்றாம் தர பேச்சாளர் பேசவில்லை. தமிழகத்தின் மிக முக்கியமான ஒரு அமைச்சர் பேசியிருக்கிறார்" என்கிறார். அதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு பதிலடியாக அவர் பலவற்றை அவர் பேசுகிறார். இதுதொடர்பாக வெளியான செய்திகளும் நமக்குக் கிடைத்தன.

நாராயணன் திருப்பதியின் இந்த வீடியோவை எடுத்து, அமைச்சர் பேசினார் என்பதை அகற்றிவிட்டு, நாராயணன் திருப்பதி ஆளுநர் மற்றும் சனாதன கொள்கைகளை எதிர்த்துப் பேசினார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டு பாஜக-வின் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்த வீடியோ பேச்சை எடிட் செய்து, ஆளுநர் ரவிக்கு எதிராக நாராயணன் திருப்பதி பேசினார் என்று விஷமத்தனமாக பதிவுகள் பகிரப்பட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆளுநர் ரவியை கிழித்துத் தொங்கவிட்ட நாராயணன் திருப்பதி என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False