அண்ணாமலையை சிறைக்கு அனுப்பிடுவேன் என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

அண்ணாமலையை சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்று பா.ஜ.க-வின் நாராயணன் திருப்பதியின் ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “என் ஜாதகம் மோசமான ஜாதகம் என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வழக்கு தொடுத்தால் நீ உள்ளே போய் விடுவாய். சின்ன பையன் என்பதால் அண்ணாமலையை விட்டு வைத்திருக்கிறேன். பிராமணர் அல்லாத தலைவராக இருப்பதால் அந்த உணர்வின் காரணமாக அண்ணாமலையை விட்டு வைத்திருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “Fake id இல்ல அந்தாலோட ஒரிஜினல் I’d தான் .. என்னனு தெரியல காயத்ரிக்கு பதவி கொடுத்ததுலருந்து மரகலண்டு போய் கண்டது கதரிட்டு இருக்கு ..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை தாஜு தீன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

” அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன், வழக்குத் தொடுத்தால் சிறைக்கு சென்றுவிடுவாய், சின்ன பையன் என்பதால் விட்டு வைத்திருக்கிறேன்” என்று நாராயணன் திருப்பதி கூறியது போன்று ட்வீட் பகிரப்பட்டு வருகிறது. தற்போதுதான் நாராயணன் திருப்பதி கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்படி இருக்கும் போது அதற்குள்ளாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டுவிட்டது என்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்தியது.

நாராயணன் திருப்பதி பெயரில் யாரோ போலியாக ட்விட்டர் பதிவை வெளியிட்டிருக்கலாம் என்று சந்தேகத்தில் இந்த பதிவு பற்றி ஆய்வு செய்தோம். நாராயணன் திருப்பதியின் ட்விட்டர் ஐடி சரியாக இருந்தது. இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் நாராயணன் திருப்பதி ஒரே விஷயம் தொடர்பாக  நான்கு தொடர்ச்சியான ட்வீட் பதிவுகளை வெளியிட்டிருக்கிறார் என்பது அந்த ஸ்கிரீன்ஷாட் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. எனவே, மற்ற மூன்று ட்வீட்களை பார்த்தால்தான் உண்மை புரியும் என்பதால், ஜூன் 13, 2022 அன்று நாராயணன் திருப்பதி வெளியிட்ட ட்வீட்களை பார்த்தோம்.

அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள ட்வீட்டை நாராயணன் திருப்பதி வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதன் தொடர்ச்சியாக, “கூட இருந்தே குழி தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள் பிராமணர்கள்” : ஆர் எஸ் பாரதி.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

உங்கள் ஜாதகம் மோசமான ஜாதகம் தான் ஆர் எஸ் பாரதி அவர்களே. தள்ளாத வயதில் விரைவில்  சிறைக்கு செல்ல தயாராகுங்கள். அண்ணாமலை சின்னப்பையன் அல்ல சிங்கத்தலைவன் . தி மு க என்ற குள்ள நரியை ஓட ஓட விரட்ட வந்த சிங்கம். அதனால் தான் தி மு கவினர் கொலை மிரட்டல்கள் விடுக்கின்றனர். பிராமணர்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தொடர்ந்து அந்த சமுதாயத்தைத் தாக்கும் தி மு க கோழைகளே, தைரியமிருந்தால், திராணியிருந்தால், முதுகெலும்பிருந்தால் அண்ணாமலையின் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்து  பாருங்கள். போனால் போகிறது என்று உங்களை பாஜக தான் விட்டு வைத்திருக்கிறது. ஒரு சாதியை இழிவுபடுத்தும் கேடுகெட்ட அரசியலை கைவிடுங்கள். இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும். நாராயணன் திருப்பதி” என்று இருந்தது. நான்கு முழு ட்வீட்டையும் பகிராமல், முதல் ட்வீட்டை மட்டும் பகிர்ந்திருப்பது தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளது.

நிலைத் தகவலில் காயத்ரிக்கு பதவி கொடுத்ததால் நாராயணன் மனரீதியாக பாதிக்கப்பட்டுவிட்டார் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் நாராயணன் திருப்பதிக்கும் அண்ணாமலைக்கும் மோதல் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயற்சித்திருப்பது தெரிகிறது. ஆனால், ஆர்.எஸ்.பாரதி கூறியதாக நாராயணன் இதை தெரிவித்துள்ளார். இது நாராயணனின் கருத்து இல்லை. ஆர்.எஸ்.பாரதிக்கு அவர் பதில் கொடுத்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. 

நாராயணன் திருப்பதி ட்வீட் பதிவு உண்மைதான். ஆனால், அது முழுமையானது இல்லை. நான்கில் மூன்றை மறைத்து விஷமத்தனமாக ஒரே ஒரு ட்வீட்டை மட்டும் பகிர்ந்துள்ளனர். நாராயணன் வெளியிட்ட ட்வீட்டையே அவருக்கு எதிரானதாக மாற்றி பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அண்ணாமலையை சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்று நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்ததாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலையை சிறைக்கு அனுப்பிடுவேன் என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply