இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்களை புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் ஜோசப் ஹோப் என்பவர் கட்டுரை எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு வாசகர் ஒரு பதிவை அனுப்பி. அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், " "👌😄*பிரதமர் மோடியைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் பார்வையைப் பார்க்கவும்:* ஜோசப் ஹோப், நியூயார்க் டைம்ஸின் தலைமை ஆசிரியர்" என்று குறிப்பிட்டு மிக நீண்ட பதிவாக இருந்தது. பிரதமர் மோடி மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என்ற வகையில் அந்த மிகப்பெரிய கட்டுரை அமைந்திருந்தது. அது மிகச் சிறந்த கட்டுரை என்றும் மோடியின் சாதனை மற்றும் அவரது கொள்கை பற்றி இந்தியாவில் எந்த ஊடகங்களும் பேசாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive

ஃபேஸ்புக்கில் யாராவது இந்த பதிவை ஷேர் செய்துள்ளார்களா என்று பார்த்தோம். பலரும் இதை ஷேர் செய்து வருவது தெரிந்தது. இந்த பதிவை Senthil Kumaran என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2021 செப்டம்பர் 8ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நரேந்திர மோடியால் இந்தியாவை சிறப்பாக வழிநடத்த முடியாது என்று 2013ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டிருந்தது. நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் நிலைமை மாறி தற்போது பிரதமர் மோடி இந்தியாவை மிகச் சிறப்பாக வழிநடத்துகிறார் என்று நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டது போன்று தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மையில் இந்த கட்டுரை நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியானதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. நியூயார்க் டைம்ஸ் அப்படி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தால் நிச்சயமாக பா.ஜ.க ஆதரவு ஊடகங்களாவது அதை வெளியிட்டிருக்கும். ஆனால் இந்தியாவிலும் அப்படி ஒரு செய்தி வெளியானதாக எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: nytco.com

எனவே, நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஜோசப் ஹோப் என்ற பெயரில் கட்டுரை ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போதும் எந்த கட்டுரையும் நமக்கு கிடைக்கவில்லை.

எனவே, நியூயார்க் டைம்ஸ் இதழின் ஆசிரியர் யார் என்று அதன் இணையதள பக்கத்துக்கு சென்று பார்த்தோம். அதன் ஆசிரியர் பெயர் Dean Baquet என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அவர் 2014ம் ஆண்டு மே மாதம் இந்த பதவிக்கு வந்தார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது மோடி முதன் முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்ற அதே மாதத்தில் இவரும் நியூயார்க் டைம்ஸ் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: nytco.com

ஒருவேளை நியூயார்க் டைம்ஸ் இதழில் பணியாற்றும் இணை, துணை ஆசிரியர் யாராவது ஜோசப் ஹோப் என்ற பெயரில் உள்ளார்களா என்று பார்த்தோம். அந்த பெயரில் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றி நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியானது.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தியில் இது தொடர்பான கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. நியூயார்க் டைம்ஸ் இதழைத் தொடர்புகொண்டு கேட்ட போது அவர்கள் இந்த தகவல் தவறானது, அப்படி எந்த ஒரு கட்டுரையையும் நியூயார்க் டைம்ஸ் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஜோசப் ஹோப் என்ற பெயரில் யாரும் பணியாற்றவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பிரதமர் மோடியை புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் கட்டுரை எழுதினார் என்று பரவும் தகவல் போலியானது, வதந்தி என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரதமர் மோடியின் செயல்பாடுகளை புகழ்ந்து தி நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நரேந்திர மோடியை புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் ஜோசப் ஹோப் எழுதியதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False