
‘’அபுதாபி இளவரசர் தன்னுடைய சொந்த செலவில் அபுதாபியில் நாராயணன் திருக்கோயிலை கட்டியுள்ளார்,’’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்
அபுதாபி இளவரசர் தன் சொந்த செலவில் கட்டியுள்ள நாராயணன் தி௫க்கோவில். அபுதாபில் கட்டியுள்ளார்
இந்த ஃபேஸ்புக் பதிவில், மிக பிரம்மாண்ட அழகிய கோவில் படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இது அபுதாபியில் உள்ளது என்றும், இதை அபுதாபி இளவரசர் தன்னுடைய சொந்த செலவில் கட்டிக்கொடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதை பகிர்ந்தவரின் பெயர் அஜித் குமார் என உள்ளது. புரொஃபைலில் நடிகர் அஜித் படம் இருப்பதால், பார்ப்பதற்கு நடிகர் அஜித் குமாரின் ஃபேஸ்புக் பக்கம் போல தெரிந்தது. பிரம்மாண்ட அழகிய இந்து கோவில் என்று கூறப்பட்டுள்ளதாலும், நடிகர் அஜித் இதை பகிர்ந்துள்ளார் என்று நினைத்தும் பலர் இதை பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் பல இந்து, கிறிஸ்தவ, சீக்கிய ஆலயங்கள் உள்ளன. அபுதாபியில் பிரமாண்டமான இந்து கோவில் ஏதேனும் கட்டப்பட்டுள்ளதா, அபுதாபி இளவரசர் அதைக் கட்டிக்கொடுத்தாரா என்று ஆய்வு மேற்கொண்டோம். முதலில் இந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். தேடல் முடிவு இது டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோவில் என்று கூறியது.
அபுதாபியில் இந்து கோயில் உள்ளதா என்று தேடினோம். அப்போது கடந்த ஆண்டு அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோவில் கட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியானது குறித்தும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்ததும் நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி தேடினோம்.
2015ம் ஆண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றபோது அபுதாபியில் இந்து கோவில் அமைப்பது தொடர்பான கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஐக்கிய அரசு அமீரக அரசு, கோவிலுக்கான நிலத்தை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. கடந்த 2018ம் ஆண்டு மோடி அங்கு சென்றபோது, கோவிலை கட்டும் போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தாஎ (பி.ஏ.பி.எஸ்) நிர்வாகிகளுக்கும் ஐக்கிய அரபு அமீரக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. (இந்த அமைப்புதான் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலையும் கட்டியது). மேலும், புதிய கோவில் கட்டுமானம் பற்றி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கோவிலின் மாதிரியை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் கூடுதலாக 14 ஏக்கர் நிலம் கோவில் கட்ட தானமாக வழங்கப்பட்டது. மொத்தம் 27.7 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் கட்டப்பட உள்ளது.
ஏப்ரல் 20, 2019ல் தான் அபுதாபியில் கோவில் கட்டுமான பணிக்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது. இது தொடர்பாக பி.பி.சி தமிழ் வெளியிட்டுள்ள செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
பிபிசி வெளியிட்டிருந்த செய்தி அடிப்படையில், இந்த கோவிலுக்கான நிலத்தை அபுதாபி இளவரசர் வழங்கியது தெரிந்தது. ஆனால், கோவிலுக்கான கட்டுமானத்துக்கு அவர் நிதி வழங்கியதாக செய்திகள் இல்லை. 7 கோபுரங்களை கொண்ட இந்த கோயிலை மக்களிடம் நிதி திரட்டிதான் போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா அமைப்பு கட்டுகிறது.
அபுதாபியில் சில சமயம் 50 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் செல்லுமாம். அதைத் தாங்கக் கூடிய வகையில், ராஜஸ்தானில் இருந்து கட்டுமான பொருட்கள் அங்கே கொண்டு செல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த கோவிலை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த கோவிலுக்கு என்று அதிகாரப்பூர்வ இணைய தள பக்கம் உள்ளது. அதில், இந்த கோவில் கட்டுமானம் கடந்துவந்த பாதை மிகத் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானத்துக்கு உதவும்படியும் அந்த இணையதளத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கோவிலின் இணைய தள பக்கத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த பதிவை அஜித் குமார் என்ற பெயர் கொண்ட ஃபேஸ்புக் குழு பதிவிட்டிருந்தது. நடிகர் அஜித் குமாரின் படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்திருந்தனர். அவருடைய ஃபேஸ்புக் முகவரி தல அஜித் என்று இருந்தது.
நடிகர் அஜித் குமார் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது இல்லை. அவர் சார்பாக சமூக வலைதளத்தில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ பக்கமும் இல்லை. சமூக ஊடகங்களில் சிலரது கீழ்த்தரமான பேச்சு காரணமாக, நடிகர் அஜித் சமூக ஊடகம் பக்கமே வருவது இல்லையாம். இதுதொடர்பாக 2017ம் ஆண்டு அஜித் குமாரின் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை நமக்குக் கிடைத்தது. இதன் மூலம் இந்த பக்கம் அஜித் பெயரில் இயங்கும் போலி என்பது தெரிந்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நம்முடைய ஆய்வின் அடிப்படையில், அபுதாபியில் இப்போதுதான் கோவில் கட்டுமான பணியே தொடங்கியுள்ளது தெரிந்தது. மேலும், கோவிலுக்கான நிலத்தை அபுதாபி இளவரசர் வழங்கியுள்ளார். பொது மக்கள், தனியார் நிதி பங்களிப்புடன் கோவில் கட்டப்பட உள்ளது. இந்த பதிவில் இடம் பெற்ற கோவில் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது. மேலும், இது நடிகர் அஜித்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கமும் கிடையாது என சந்தேகமின்றி தெளிவுபடுத்தப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
