
உலக மக்களால் விரும்பப்படும், மிகவும் வலிமை மிக்க தலைவர் நம்மை ஆசிர்வதிக்க வந்துள்ளார் என்று பிரதமர் மோடி குறித்து தி நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய நியூயார்க் டைம்ஸ் முதல் பக்கம் பகிரப்பட்டுள்ளது. அதில், “Last, Best Hope of Earth, Worlds Most Loved and Most Powerful Leader, Is here to Bless us” என்று இருந்தது. அதாவது, உலகின் கடைசி மற்றும் சிறந்த நம்பிக்கை… உலகின் மிகவும் விரும்பப்படும் மற்றும் மிகவும் ஆற்றல் மிக்க தலைவர் நம்மை ஆசிர்வதிக்க வந்துள்ளார் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த பதிவை இராம.சரவணன் கவுடா பாஜக என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 செப்டம்பர் 26ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நியூயார்க் டைம்ஸ் பிரதமர் மோடியை புகழ்ந்தது, இகழ்ந்தது என்று நிறைய வதந்திகள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பரவிக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட பிரதமர் மோடியை புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் இதழின் ஆசிரியர் கட்டுரை எழுதினார் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். அப்படி யாரும் நியூயார்க் டைம்ஸில் வேலை செய்யவில்லை என்று அந்த ஊடகம் விளக்கம் அளித்திருந்தது.
இந்த சூழலில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை புகழ்ந்து தி நியூயார்க் டைம்ஸ் வரவேற்றதாக செய்தித்தாளின் முதல் பக்கம் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் செப்டம்பர் 26, 2021 அன்று இந்த செய்தி வெளியானதாக உள்ளது. எனவே, செப்டம்பர் 26ம் தேதி வெளியான தி நியூயார்க் டைம்ஸ் இதழைப் பார்த்தோம். அதன் சர்வதேச பதிப்பில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் எந்த ஒரு செய்தியும் இல்லை.

அசல் பதிவைக் காண: nyt.com I Archive
அதன் அமெரிக்க பதிப்பின் முதல் பக்கத்தைப் பார்த்தோம். அதிலும் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் எந்த செய்தியும் இல்லை. அடுத்ததாக நியூயார்க் நகர பதிப்பையும் பார்த்தோம். அதிலும் அப்படி எந்த செய்தியும் இல்லை. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டது போன்ற தலைப்பைக் கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்படி பிரதமர் மோடியை புகழ்ந்து வெளியானதாக எந்த ஒரு கட்டுரையும் நமக்குக் கிடைக்கவில்லை.

இந்த புகைப்படத்தை சற்று பெரிதாக்கி பார்த்த போது, செப்டம்பர் என்பதற்கான ஆங்கில வார்த்தை தவறாக இருந்தது. “SEPTEMBER” என்பது தவறாக “SETPEMBER” என்று எழுதப்பட்டிருந்தது. அதைவிட வேடிக்கை, பிரதமர் மோடி கையெழுத்து இடுவது போன்ற புகைப்படத்தின் கீழ், “His Highness, Modiji is signing on a blank a4 paper to bless our country… har har Modi” என்று இருந்தது. அதாவது, வணக்கத்துக்குரிய பிரதமர் மோடி அவர்கள் நம்முடைய நாட்டை ஆசிர்வதிக்க வெற்று ஏ4 காகிதத்தில் கையெழுத்திடுகிறார், ஹர ஹர மோடி” என்று இருந்தது. இதைக் கூட பார்க்காமல் மோடியை புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது என்று பதிவிட்டிருப்பது வேடிக்கையாக இருநதது.
இதன் மூலம் பிரதமர் மோடியை புகழ்ந்து தி நியூயார்க் டைம்ஸ் முதல் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டது போன்று பகிரப்படும் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்த உலகின் கடைசி நம்பிக்கை பிரதமர் மோடி என்று தி நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டது போன்று பரவும் புகைப்படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:உலகின் மிகவும் விரும்பப்படும், வலிமை மிக்க தலைவர் என்று மோடியை புகழ்ந்ததா நியூயார்க் டைம்ஸ்?
Fact Check By: Chendur PandianResult: False
