
காலில் அடிபட்டதாக கூறிய மம்தா பானர்ஜி, சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நடந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
சக்கர நாற்காலியை ஒருவர் தள்ளிக் கொண்டு வர, மம்தா பானர்ஜி வீறுகொண்டு நடப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வீல் சேரிலிருந்து எழுந்து நடந்தார் தீதி, under P.K. instructions.அடுத்து தத்தி ட்ராமா.!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Mosur Sakthivel என்பவர் 2021 மார்ச் 14ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. தாக்குதல நடக்கவில்லை விபத்து என்று தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் அது நடிப்பு என்று மேற்கு வங்க எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் ஆன மம்தா கட்டுப்போட்ட காலுடன், சக்கர நாற்காலியில் அமர்ந்து தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்து அதன்படி பிரசாரமும் செய்து வருகிறார்.
அசல் பதிவைக் காண: india.com I Archive
இந்த நிலையில், மம்தா வீல் சேரில் இருந்து எழுந்து நடந்தார் என்று குறிப்பிட்டு படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மம்தா பானர்ஜியை வீல் சேரில் உட்காரவைத்து தள்ளிக்கொண்டு வரும் படம் நமக்குக் கிடைத்தது. சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வரும் நபர், அருகில் உள்ளவர்கள் என அனைவரின் பார்வையும் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருப்பவர் மீது இருந்தது. மம்தா பானர்ஜி நடக்கிறார் என்றால் அவரை யாரும் கவனிக்கவே இல்லை. எனவே, இந்த படத்தை எடிட் செய்திருக்கலாம் என்பது உறுதியானது.
அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive
மம்தா பானர்ஜி நடக்கும் படத்தைத் தேடினோம். அந்த படத்தை இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட இதழ்கள் பல ஆண்டுகளாக இந்த நடக்கும் புகைப்படத்தை தங்கள் செய்திகளில் பயன்படுத்தி வந்திருப்பதைக் காண முடிந்தது. இந்துஸ்தான் டைம்ஸ் இந்த புகைப்படத்தை 2012ம் ஆண்டு வெளியிட்டிருந்தது. எப்போது எடுத்தது என்பது சரியாகத் தெரியவில்லை.
அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive
இரண்டு படங்களிலும் பல வித்தியாசங்கள் இருப்பதை காண முடிகிறது. முக்கியமாக மம்தா அணிந்திருந்த காலணி. காலில் கட்டுப்போட்டு, மூக்குக் கண்ணாடியோடு உடல் சோர்ந்து போய் சக்கர நாற்காலியில் அமர்ந்து வருவது போல படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், நாம் ஆய்வுக் எடுத்துக் கொண்ட படத்திலோ வேறு காலணி அணிந்திருக்கிறார், கண்ணாடி அணியவில்லை. இது எல்லாம் இரண்டும் வெவ்வேறு படங்களின் இணைப்பு என்பதை உறுதி செய்கின்றன.
நம்முடைய ஆய்வில் மம்தா பானர்ஜி நடக்கும் பழைய படத்தை எடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன புகைப்படத்தில் எடிட் செய்து சேர்த்து, “வீல் சேரில் இருந்து எழுந்து நடந்த மம்தா” என்று தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பி வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நடந்தார் என்று பகிரப்படும் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:வீல் சேரில் இருந்து எழுந்து நடந்தாரா மம்தா?- ஃபோட்டோஷாப் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: Altered