
காவலர்களுக்கு ரூ.74.8 கோடியில் வாங்கப்பட்ட 85 இருசக்கர வாகனங்களை மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னை காவல்துறைக்கு ரூ.74.8 கோடியில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் சேவையைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “74.8 கோடியில் 85 இருசக்கர வாகனங்கள் னா ஒரு பைக் விலை 88 இலட்சம் வருது… 88 இலட்சத்துக்கு அப்படி என்ன பைக்னு தெரியலயே 🤔” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
74.8 கோடி ரூபாய் கொடுத்து வெறும் 85 மோட்டார் பைக்குக்கள் வாங்கப்பட்டதாக நியூஸ் கார்டில் பகிரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு பைக் 85 லட்ச ரூபாய் வருகிறது என்று பலரும் சமூக ஊடகங்களில் தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
முதலில் இந்த நியூஸ் கார்டு உண்மைதானா என்று அறிய நியூஸ் 7 தமிழ் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். ஜூலை 24, 2024 அன்று இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு உண்மையானதுதான் என்பது தெளிவானது.
அடுத்ததாக இந்த தகவல் உண்மையா என்று அறிய கூகுளில் தேடினோம். அப்போது செய்தி ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன. தினமணி வெளியிட்டிருந்த செய்தியின் தலைப்பே, “ரூ.74 லட்சம் செலவில் காவல் துறைக்கான 85 இருசக்கர வாகனங்கள் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்” என்றுதான் இருந்தது. இதன் மூலம் நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட செய்தியில் தவறு ஏற்பட்டிருப்பது தெளிவானது.
உண்மைப் பதிவைக் காண: dinamani.com I Archive
இதை உறுதி செய்துகொள்ளத் தமிழ்நாடு அரசு பத்திரிகை செய்தி ஏதும் வெளியிட்டுள்ளதா என்று தமிழ்நாடு அரசு இணையதளத்தில் தேடிப் பார்த்தோம். இந்த செய்தி ஜூன் 24ம் தேதி வெளியாகி இருந்ததால், அந்த குறிப்பிட்ட தேதியில் பார்த்தோம். தமிழ்நாடு அரசின் பத்திரிகை செய்தியும் நமக்குக் கிடைத்தது.
அதில், “சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.74 இலட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 85 இருசக்கர வாகனங்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: tn.gov.in I Archive
84 லட்சத்தில் இருசக்கர வாகனம் வாங்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தியை நியூஸ் 7 தமிழ் தவறுதலாக ரூ.84 கோடி என்று வெளியிட்டுள்ளது. இது தெரியாமல் நெட்டிசன்களும் தமிழ்நாடு அரசை விமர்சித்துப் பதிவிட்டு வருவது தெளிவாகிறது.
இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரூ.74.8 லட்சத்தில் 85 இருசக்கர வாகனங்களை வாங்கிய தமிழ்நாடு அரசு என்று குறிப்பிடுவதற்கு பதில் 74.8 கோடி என்று தவறாக குறிப்பிட்டு நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டு காரணமாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழ்நாடு அரசு ரூ.74.8 கோடிக்கு 85 இருசக்கர வாகனங்களை வாங்கியதா?
Fact Check By: Chendur PandianResult: False
