
ஜெயலலிதாவின் நகை, சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகை சொத்துக்களை நியாயமாக ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் கர்நாடக நீதிமன்றத்திலிருந்தது. அதை சமீபத்தில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தது.
இந்த சூழலில், தமிழ்நாடு அரசு அந்த நகைகள் மற்றும் சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சிலர் நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் போல இல்லை. பார்க்கும் போதே போலியானது போல் தெரிகிறது. இதை உறுதி செய்துகொள்வதற்காக ஆய்வைத் தொடர்ந்தோம்.
முதலில் அண்ணாமலை இப்படி ஏதேனும் பேட்டி அளித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அடுத்ததாக இந்த நியூஸ் கார்டின் நம்பத்தன்மை குறித்து ஆய்வைத் தொடர்ந்தோம்.
இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்று அறிய 2025 பிப்ரவரி 15ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை அதன் சமூக ஊடக பக்கங்களில் பார்த்தோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு ஒன்றை அந்த ஊடகம் வெளியிட்டிருந்தது தெரிந்தது.
ஆனால் அதில், “AirShow-வைக்கூட ஒழுக்கமாக நடத்த தெரியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சென்னையில் ஒரு AirShow-வை ஒழுக்கமாக நடத்த தெரியவில்லை, மணிப்பூர் பற்றிப் பேசுகிறார்; மற்ற மாநிலங்களில் நடக்கும் பிரச்னையைப் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள பிரச்னையைப் பற்றி பேசுவது இல்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்திருப்பது தெரிந்தது.
இந்த நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவிட்டுத் தேடிய போது, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்த செய்தி நமக்கு கிடைத்தது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.
முடிவு:
ஜெயலலிதாவின் நகை, சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:“ஜெயலலிதாவின் நகைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False


