
கேரளாவில் பெய்து வரும் கன மழையில் காட்டாற்றில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதாக வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கார் ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் தற்போது கன மழை பெய்து வருகிறது ! மலைப்பகுதி காற்றாட்டு வெள்ளத்தில் வண்டிகள் முன்னே செல்ல தயங்கி நிற்க… பின்னால் வேகமாக வந்த ஒரு கார் இவைகளை சாலை ஓரமாக முந்தி செல்ல அந்த கார் சாலையில் தேங்கிய மழை நீர் சுழலில் சிக்கி மூழ்கி தண்ணீரில் அடித்து செல்லும் காட்சி ! முன்னேற்றம் தேவை தான், அடுத்தவரை தள்ளி விட்டு செல்லும் முரட்டு முன்னேற்றம் தேவை தானா ? அதன் விளைவு தான் இது ?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை Rrpestcontrol Raja என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 10ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவில் காட்டாற்று வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்த வீடியோ கேரளாவில் எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த வீடியோ உண்மையில் கேரளாவில் எடுக்கப்பட்டதுதானா என்று அறிய ஆய்வு மேற்கொண்டோம்.
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி பல்வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். yandex.com ரிவர்ஸ் இமேஜ் தேடலில் சில ஸ்பானிஷ் மொழியில் வெளியான ட்வீட்கள் நமக்கு கிடைத்தன. மொழிமாற்றம் செய்து பார்த்த போது மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் தலைநகர் மனாகுவாவிற்கு அருகில் உள்ள நிண்டிரி என்ற நகராட்சிப் பகுதியில் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், வாகனத்தில் இருந்து வெளியே குதித்த ஓட்டுநர் உயிரிழந்தார்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஸ்பானிஷ் மொழியில் வெளியான பதிவை அப்படியே காப்பி செய்து கூகுள் தேடலில் பதிவிட்டுத் தேடினோம். அப்போது இது தொடர்பாக ஸ்பானிஷ் மொழியில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. மே 29, 2023 அன்று வெளியான செய்தியில், நிகரகுவாவில் காட்டாற்று வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது.

உண்மைப் பதிவைக் காண: infobae.com I Archive 1 I semana.com I Archive 2
காரில் இருந்து வெளியே குதித்தும் ஓட்டுநரால் உயிர் பிழைக்க முடியவில்லை. உயிரிழந்தவரின் பெயர் Alberto Uriel Romero Martínez என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் கார் காட்டாற்றில் அடித்துச் செல்லப்படும் மற்றொரு வீடியோவும் செய்திகளில் பதிவிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ கேரளாவில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.
முடிவு:
கேரளாவில் கன மழை காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் என்று பரவும் வீடியோ மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கேரளாவில் காட்டாற்றில் சிக்கிய கார் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
