இந்துக்களின் ஓட்டு பெறும் அளவுக்கு தி.மு.க தரம் தாழ்ந்துவிடவில்லை என்றாரா மு.க.ஸ்டாலின்?
இந்துக்கள் வாக்களித்துத்தான் வெற்றிபெற வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றி தி.மு.க-வுக்கு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தகவலின் விவரம்
நீங்க சொன்னதுக்கு பிறகு நாங்க ஓட்டு போட்டா ! நாங்க மனுசனே இல்லை !!
இந்துக்கள் வாக்களித்துத்தான் வெற்றி பெறுவோமென்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை. இந்துக்களின் வாக்குபெறும் அளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தரம் தாழ்ந்துவிடவில்லை என்று ஸ்டாலின் கூறியதாக, நியூஸ்7 தொலைக்காட்சியின் பிரேக்கிங் கார்டு பகிரப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9ம் தேதி வெளியான இப்பதிவு, இந்துக்களை அவமானம் செய்யும் வகையில் உள்ளது என்பதாலும், நியூஸ்7 தொலைக்காட்சியின் லோகோவுடன் இந்த நியூஸ் கார்டு இருப்பதாலும், இதை உண்மை என்று நம்பி பலரும் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
இந்து கோவில்களை தகர்ப்போம், இந்துக்களின் வாக்கு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பல்வேறு வதந்திகள் பரவிக்கொண்டே இருக்கிறது. தி.மு.க என்றால் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற தோற்றத்தை உருவாக்க சில ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடவுள் மறுப்பு கொள்கையை விட்டுவிட்டு, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் வார்த்தையை ஏற்றுக்கொண்டவர் தி.மு.க-வைத் தொடங்கிய அண்ணா. இது தொடர்பாக பிபிசி தமிழுக்கு சுப.வீரபாண்டியன் அளித்த பேட்டியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மை இப்படி இருக்க, ஒட்டுமொத்த இந்துக்களை தி.மு.க வெறுக்கிறது, அழிக்க நினைக்கிறது என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்தான் இந்துக்களின் ஓட்டு தேவையில்லை, இந்துக்களின் கோயில்களைத் தகர்ப்போம் என்று எல்லாம் மு.க.ஸ்டாலின் பேசியதாக தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் ஏற்கனவே மேற்கொண்ட உண்மை கண்டறியும் ஆய்வினைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த சூழ்நிலையில், இந்துக்களின் ஓட்டு பற்றி மு.க.ஸ்டாலின் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கே, எப்போது பேசினார் என்று எதுவும் குறிப்பிடவில்லை.
நியூஸ்7 பிரேக்கிங் கார்டை ஆய்வு செய்தோம். அதில், பிப்ரவரி 15, மதியம் 2.00 என்று இருந்தது. நியூஸ்7 தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில், பிப்ரவரி 15ம் தேதி வெளியான எல்லா ஃபிரேக்கிங் கார்டுகளையும் பார்த்தோம். அதில், இந்த படத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வெளியான கார்டு கிடைத்தது. அது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றிய கார்டு என்பது உறுதியானது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பிரேக்கிங் கார்டாக வெளியிட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பான நியூஸ்7 போட்டோ கார்டை எடுத்து திருத்தம் செய்திருப்பது தெரிந்தது. இரண்டு கார்டிலும் உள்ள ஃபான்ட்கள் வேறுபட்டதாக இருந்தது. மேலே வலது பக்கத்தில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு என்று இருந்தது மு.க.ஸ்டாலின் பதிவில் அழிக்கப்பட்டு இருந்தது தெளிவாகத் தெரிகிறது. அதேபோல் வலது புறம் கீழே, நியூஸ்7 லோகோவுக்கு அருகே நீல நிற டிசைன் துண்டாக நிற்பதும் தெரியும். மு.க.ஸ்டாலின் என்பதற்கு பதில், முக.ஸ்டாலின் என்று இருக்கும்.
இருப்பினும், குறிப்பிட்ட அந்த தேதியில் இந்துக்கள் பற்றி மு.க.ஸ்டாலின் ஏதாவது தெரிவித்தாரா என்று கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. மாறாக, வதந்தி பற்றிய பல்வேறு செய்திகள் நமக்குக் கிடைத்தன.
கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி மு.க.ஸ்டாலின் இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி இந்து தமிழில் வெளிவந்துள்ளது. அதில், தி.மு.க இந்துக்களுக்கு விரோதமான கட்சி இல்லை என்று மு.க.ஸ்டாலின் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார். இந்துக் கோவில்கள் சீரமைக்க, ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட வைக்க, இந்து மக்களின் வளர்ச்சிக்கு தி.மு.க செய்து வந்ததை எல்லாம் அதில் அவர் பட்டியலிட்டுள்ளார். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
சமீபத்தில் கூட பாளையங்கோட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, இந்து மதம் பா.ஜ.க-வுக்கு சொந்தமானது இல்லை. தி.மு.க இந்துக்களுக்கு எதிரானது இல்லை என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதுவரை நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்த உண்மையின் விவரம்…
- நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்டதாக கூறப்படும் பிரேக்கிங் நியூஸ் போட்டோ கார்டு தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகும்.
- உண்மையான நியூஸ் கார்டு கிடைத்துள்ளது. அது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு தொடர்பானது.
- மு.க.ஸ்டாலின், இந்துக்களின் வாக்கு வேண்டாம், என்று பேசியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை.
- இந்துக்களை தி.மு.க அவமரியாதை செய்கிறது என்று தொடர்ந்து பரவிவரும் வதந்திகள்.
- இந்துக்களுக்கு எதிரானவர்கள் போல் சித்தரிக்கிறார்கள் என்று இந்து நாளிதழுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி.
- பாளையங்கோட்டை தேர்தல் பிரசாரத்தின்போது இந்துக்களுக்கு எதிரான கட்சியில்லை என்று மு.க.ஸ்டாலின் பேசியதற்கான ஆதாரம்.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போல மு.க.ஸ்டாலின் எங்கேயும் எப்போதும் பேசியது இல்லை. தி.மு.க-வுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விஷமத்தனமான பிரசாரம் இது என சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட பதிவு தவறாக, விஷமத்தனமாக சித்தரிக்கப்பட்டது என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Title:இந்துக்களின் ஓட்டு பெறும் அளவுக்கு தி.மு.க தரம் தாழ்ந்துவிடவில்லை என்றாரா மு.க.ஸ்டாலின்?
Fact Check By: Praveen KumarResult: False