சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மஹாமேரு மலர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive

மலர் ஒன்றின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அதில், "ஓம் நமச்சிவாய போற்றி 400ஆண்டுக்கு ஒருமுறை சதுரகிரி மலையில் பூக்கும் (மஹாமேரு)பூ இந்ததலை முறையில் பார்க்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அடுத்து எப்போது பார்க்க இதை பகிரவும் அனைவரும் பார்க்கவும்..! ஓம் நமச்சிவாய போற்றி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய மலர் என்று சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஏதாவது ஒரு மலரின் படத்தை பகிர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மஹாமேரு என்று இதற்கு முன்பு பல வதந்தி பரப்பப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம். தற்போது மலரை மட்டும் மாற்றி பழைய வதந்தியைப் புதிது போல பகிர்ந்துள்ளனர்.

400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய மலர்களின் படமா இது?

சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்திடும் மஹாமேரு மலர் என்று பரவும் படம் உண்மையா?

இந்த மலர் தொடர்பாக அறிய, இந்த படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது புகைப்படத்தில் இருக்கும் மலரானது "டிசோகாக்டஸ் கிரெனடஸ்" என்ற பெயர் கொண்ட செடியின் பூ என்று தெரியவந்தது. இது ஒரு வகை கற்றாழைச் செடி என்றும், இது உலகம் முழுக்க விளைவிக்கப்படுகிறது என்றும் செய்திகள் கிடைத்தன. மேலும் இதற்கு பருவக் காலம் என்று இல்லை, இரவில் பூக்கக் கூடிய மலர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிக மனம் கொண்டது என்பதால் பலரும் இதை தங்கள் வீட்டில் வளர்க்கிறார்கள் என்றும் ‘ஒரு பூ போதும்; வீடு முழுவதும் நறுமணம் வீச’ என்று இந்த செடி பற்றி பல தகவல்கள் நமக்கு கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: istockphoto.com I Archive 1 I mrplantgeek.com I Archive 2

இதற்கு Night Queen of Flowers என்ற பெயரும் இருப்பதாக சில செய்திகள் தெரிவித்தன. அதாவது இந்த பூ இரவில் மட்டும் பூக்கும் தன்மை கொண்டது என்பதாலும் அதிக வாசனை கொண்டது என்பதாலும் இரவு மலர்களின் அரசி என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த செடி முதிர்ச்சியடைய 5 ஆண்டுகள் வரை ஆகும் என்றும், அதன் பிறகு கோடைக் காலத்தில் இது பூக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த மலர் 400 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ இல்லை என்பது தெளிவானது.

சதுரகிரி மலையில் ஏதாவது அதிசய மலர்கள் உள்ளதா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த மலரும் இல்லை என்று காந்தி கிராமிய பல்கலைக் கழக உயிரியியல் உதவிப் பேராசிரியர் தமிழ் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டி நமக்கு கிடைத்தது. அதில், ". மஹாமேரு புஷ்பம் என்ற வகை மலர்களே கிடையாது. ஆர்க்கிட் வகை மலர்கள் வெளிநாட்டு ரகத்தைச் சேர்ந்த அலங்காரச் செடி. பொக்கே தயாரிப்பதற்கும், வீடுகளில் அழகுக்காகவும் இதை வளர்ப்பர்.

உண்மைப் பதிவைக் காண: hindutamil.in I Archive

அதிக மழை பெய்து குளிர்ந்த காலநிலை நிலவும்போது, இவை நன்கு வளரும். காசி தும்பை மலர்ச் செடிகள் 3 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பவை. உலகத்தில் எந்த இடத்திலும் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் செடிகளே இல்லை. அதிகபட்சம் குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பவை. அதுவே, ஏன் என்ற காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

400 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மலர் என்று உலகில் எதுவுமே இல்லை. மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மலர் புகைப்படம் ஆண்டுதோறும் பூக்கக் கூடிய பிரம்ம கமல் மலர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சதுரகிரி மலையில் 400 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மஹாமேரு மலர் என்று பரவும் தகவல் மற்றும் புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மஹா மேரு சதுரகிரியில் பூத்தது என்று பரவும் தகவல் தவறானது என்பதை, 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூ என்று ஒன்று இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘சதுரகிரி மலையில் 400 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மஹாமேரு’ என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False