தி.மு.க ஆட்சியில் படிக்கட்டு இல்லாத பஸ் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

படிக்கட்டு உடைந்த பஸ்ஸை இரண்டு மாணவர்கள் பார்க்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், "அங்கே இன்னாடா தேடுறே.. குறையில்லா ஆட்சியாம்ல.. அதை தான்டா தேடுறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Giri Baba என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 6ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த திமுக கூட்டத்தில் "எந்தக் கொம்பனும் குறை சொல்லமுடியாத அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறோம்" என்று பேசியிருந்தார். அதை வைத்து சமூக ஊடகங்களில் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றில் படிகட்டே இல்லை... இவரே குறை சொல்ல முடியாத ஆட்சி நடத்துகிறேன் என்கிறார் என்று நையாண்டி செய்யும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது இந்த படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. எனவே, இந்த படம் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டதா இல்லையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2018ம் ஆண்டில் இருந்தே செய்தி, சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. 2018 ஜனவரி 25ம் தேதி இந்த படத்தை குமுதம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. ஆனால், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று குறிப்பிடப்படவில்லை. முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை விமர்சிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை 2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததும் தெரிந்தது. இவை எல்லாம் இந்த படத்துக்கும் மு.க.ஸ்டாலின் அரசுக்கும் தொடர்பில்லை என்பதை உறுதி செய்தன.

நம்முடைய ஆய்வில் 2021 மே மாதத்துக்குப் பிறகும் கூட பல அரசு பஸ்களில் படிக்கட்டுகள் உடைந்தது தொடர்பான செய்தியை காண முடிந்தது. தி.மு.க ஆட்சியில் தவறே நடக்கவில்லை என்று நாம் கூறவில்லை. எல்லா ஆட்சிக் காலத்திலும் பஸ் படிகட்டுக்கள் உடைந்துகொண்டு தான் இருக்கின்றன. நம்முடைய ஆய்வில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படம் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டது இல்லை என்பது மட்டுமே கண்டறிந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

தி.மு.க ஆட்சியில் உடைந்த பஸ் படிகட்டு சரி செய்யப்படாத நிலை என்று பரவும் புகைப்படம் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தி.மு.க ஆட்சியில் படிக்கட்டு இல்லாத பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False