
யானையின் மீது அமர்ந்து யோகா செய்யும்போது தவறி விழுந்த பாபா ராம்தேவ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போலப் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பாபா ராம் தேவ் யானை மீது அமர்ந்து யோகா செய்யும் படம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படங்கள் இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அந்த யானைக்கு ஒண்ணும் ஆகலையே… ஏண்டா யோகாவ யானை மேலதான் உட்கார்ந்து செய்யனுமா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்ற ஃபேஸ்புக் பக்கம் அக்டோபர் 14, 2020 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாபா ராம்தேவ் 2011ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த போது அவரை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட படத்தை வைத்து பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல முறை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம். இருப்பினும் பாபா ராம் தேவ்வின் புதுப்புது வீடியோக்கள் வைரல் ஆகும் போது எல்லாம் இந்த படத்தை வைத்து சூழலுக்கு ஏற்ப புது புது பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பாபா ராம்தேவ், மருத்துவமனைக்கு சென்றார்! – ஃபேஸ்புக் போஸ்ட் உண்மையா? |
அலோபதி சிகிச்சை பெறும் பாபா ராம்தேவ்! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா? |
பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்கள் விற்பனை அதிகரித்ததைத் தொடர்ந்து எல்லா நோய்க்கும் தீர்வு பதஞ்சலியில் உள்ளது என்று கூறிவிட்டு சிகிச்சை பெறுகிறார் என்று பரப்பினர். 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த போது பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவ சிகிச்சை பெறுகிறார் என்று பரப்பப்பட்டது.
தற்போது, யானையின் மீது அமர்ந்து யோகா செய்தபோது கீழே விழுந்த பாபா ராம்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற வகையில் படம் பகிரப்பட்டு வருகிறது.

அசல் பதிவைக் காண: timesofindia.indiatimes.com I Archive
யானையின் மேல் இருந்து கீழே விழுந்ததில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதா என்று தேடினோம். 2020 அக்டோபர் 13ம் தேதி யானை மீதிருந்து பாபா ராம்தேவ் கீழே விழும் வீடியோ வெளியானது. அதன் பிறகு, அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தது. அவருடைய செய்தித் தொடர்பாளர் இதை தெரிவித்ததாகக் கூறப்பட்டிருந்தது.
பாபா ராம்தேவின் செய்தித் தொடர்பாளரின் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தபோது 15ம் தேதி வெளியிட்ட பதிவு கிடைத்தது. அதில் பாபா ராம்தேவ் யானையின் மீது கீழே விழுந்தாலும் நலமாக உள்ளார். நேற்றும் இன்றும் நான்கு மணி நேர நேரலை யோகாவை அவர் செய்துள்ளார் என்று குறிப்பிட்டு யோகா செய்த ஃபேஸ்புக் லிங்கையும் கொடுத்திருந்தார். இதன் மூலம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். 2011ம் ஆண்டு கருப்புப் பணத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் போராட்டம் நடத்தியபோது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. 2011ம் ஆண்டு பாபா ராம்தேவ் போராட்டம் தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்டிருந்த புகைப்படத் தொகுப்பில் 72வது படமாக இந்த படம் இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக வீடியோ ஏதும் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். 2011 ஜூன் 12ம் தேதி வெளியான பல வீடியோக்கள் கிடைத்தன. அதில், பாபா ராம்தேவ் பழச்சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்த பிறகு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள காட்சி வருவதைக் காண முடிந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சைக்கிளிலிருந்து பாபா ராம்தேவ் விழுந்த போது இந்த படத்தை வைத்து சமூக ஊடகங்களில் வதந்தி பரவிய போது, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் கூட கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன் மூலம், பாபா ராம்தேவ் யானை மீது இருந்து கீழே விழுந்ததால் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற அர்த்தத்தில் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2011ம் ஆண்டு பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் முடித்த போது எடுத்த படத்தை தற்போது யானையில் இருந்து விழுந்த நிகழ்வோடு தொடர்புபடுத்தி பகிரப்பட்டிருப்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:யானை மேலிருந்து விழுந்த பாபா ராம்தேவ் சிகிச்சை என்று பகிரப்படும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
