“எல்லா நோய்க்கும் பதஞ்சலியில் தீர்வு என்று சொன்ன பாபா ராம்தேவ், மருத்துவமனைக்கு சென்றார்!” – ஃபேஸ்புக் போஸ்ட் உண்மையா?

தொழில் மருத்துவம் I Medical

தன்னுடைய பதஞ்சலி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தினால் எந்த நோயுமின்றி, ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறிய யோகா குரு பாபா ராம்தேவ், தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றதாகக் கூறி, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

RAMDEV 2.png

 Facebook Link I Archived Link

மருத்துவமனையில் பாபா ராம்தேவ் அனுமதிக்கப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. அதில், அவருக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டதற்கான அடையாளம் உள்ளது. மற்றொரு கையில் அவருடைய ரத்த அழுத்தம் கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

படத்தின் மேல், “எல்லா நோய்க்கும் மருந்து பதஞ்சலியில இருக்குன்னு சொல்லிட்டு… எல்லோரும் கோமியத்த உப்புப் போட்டு குடிங்கன்னு சொன்னவரு!

ஊசி, போட்டு மாத்திரை சாப்பிடுறாரு. BP வேற பாத்துக்குறார். யோகாவில் எல்லா நோயும் போகும்னு சொன்னது பொய்யா கோப்பால்” என்று உள்ளது.

இதன் மூலம், மற்றவர்களுக்கு யோகா மூலம் ஆரோக்கியமாக வாழலாம் என்று கற்றுக்கொடுத்தவர், தனக்கு உடல்நலக் குறைவு வந்ததும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார் என்று சொல்கின்றனர்.

இந்த பதிவை, Yazir Raja என்பவர் 2019 மார்ச் 5ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த படத்தில் பாபா ராம்தேவ் சுற்றி ஶ்ரீஶ்ரீரவிசங்கர் உள்ளிட்ட சாமியர்கள் இருப்பதைக் காண முடிந்தது. படம் பார்க்க அசல் போலவே இருந்தது. மார்ஃபிங் செய்யப்பட்டது போல இல்லை. இதனால், இந்த படத்தின் உண்மைத் தகவலைக் கண்டறிய, படத்தை yandex.com-ல் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் தொடர்பான செய்தி நமக்குக் கிடைத்தது.

RAMDEV 3.png

முதலில் நமக்கு ஹிந்து பிசினஸ் லைன் இணைய செய்தி ஒன்று கிடைத்தது. அந்த செய்தி 2011ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட பாபா ராம்தேவின் உடல்நிலை சீராக உள்ளது, நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று இருந்தது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படம் இந்த இணைய தளத்திலும் இருந்தது. அதில், யோகா குரு பாபா ராம்தேவின் ஒன்பது நாளாக நீடித்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை டேராடூன் மருத்துவமனையில் வாழும் கலை குரு ஶ்ரீஶ்ரீரவிசங்கர் மற்றும் மோராரி பப்பா ஆகியோர் பழச்சாறு கொடுத்து முடித்துவைத்தனர். அருகில், ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா உள்ளார்” என்று கூறப்பட்டு இருந்தது. அந்த செய்தி மற்றும் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

2011ம் ஆண்டு 9 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் என்ன நடந்தது என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஊழலுக்கு எதிராகவும் கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்துள்ளார். அவரை போலீசார் வலுக்கட்டாயமாக ஹரித்வாருக்கு அனுப்பியுள்ளனர். மேலும், டெல்லிக்குள் நுழைய அவருக்கு 15 நாட்களுக்குத் தடை உத்தரவும் பிறப்பித்தனர்.

இதனால், ராம்தேவ் தன்னுடைய ஆசிரமத்திலேயே உண்ணாவிரதம் இருந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்து மேடையில் சரிந்து விழுந்த அவரை உடனடியாக ஹிமாலயன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஐ.சி.யு-வில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது உறுதியானது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில், நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ (factcrescendo.com) இந்தி பிரிவும் கூட இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியது தெரிந்தது. அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படத்தை பயன்படுத்தி பாபா ராம்தேவுக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாக வதந்தி பரவியிருந்தது. அது தவறு என்று அவர்கள் உறுதி செய்த அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன் மூலம் உடல்நல பாதிப்பு காரணமாக அவர் சிகிச்சை பெற்றார் என்று சொல்வது தவறு. ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிராக அவர் ஒரு வாரத்துக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்ததால் மயங்கி விழுந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வேறு எந்த உடல்நலக் குறைவு காரணமாகவோ, பாதிப்பு காரணமாகவே அவர் மருத்துவ சிகிச்சை பெறவில்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட செய்திகள் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“எல்லா நோய்க்கும் பதஞ்சலியில் தீர்வு என்று சொன்ன பாபா ராம்தேவ், மருத்துவமனைக்கு சென்றார்!” – ஃபேஸ்புக் போஸ்ட் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •