FactCheck: செல்லூர் ராஜூ 4 ஆண்டுகள் முன்பு பேசிய வீடியோ தற்போது பகிரப்படுவதால் குழப்பம்…

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’ஓபிஎஸ் துரோகம் இழைத்து விட்டார் – செல்லூர் ராஜூ,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

6.02.2021 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ஓபிஎஸ் துரோகம் இழைத்துவிட்டார் – அமைச்சர் செல்லூர் ராஜூ,’’ என்று தலைப்பிட்டு, ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘’பதவி ஆசையில் ஓபிஎஸ், சட்டமன்றத்தில் திமுக.,வினர் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்படுகிறார். அவர் சசிகலாவுக்கு துரோகம் செய்துவிட்டார். ஓபிஎஸ் முதல்வர் பதவியில் இருப்பதற்கு திமுக உதவி செய்வதாகப் பேசுகிறார்கள். திமுகவினர் ஆதரவில் அதிமுக இயங்க வேண்டிய அவசியம் இல்லை,’’ என்று காரசாரமாகப் பேசுகிறார்.

இந்த வீடியோவை பார்க்கும் பலரும் இது தற்போது நிகழ்ந்ததோ என்று நினைத்து ஷேர் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா, இன்று (பிப்ரவரி 08.02.2021) தமிழ்நாடு திரும்பியுள்ளார். அவருக்குப் பல இடங்களில், அவரது ஆதரவாளர்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு தரப்பட்டது. இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் அரங்கில் விவாதிக்கப்படும் ஒன்றாகவும் மாறிவிட்டது.

ஏனெனில், ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, அப்போது முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்திற்குப் பதிலாக, தானே முதல்வராக விரும்பினார். அதற்காக முயற்சித்து வந்த நிலையில், அவருக்கு திடீரென 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதால், தனது விசுவாசி என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்துவிட்டு, சசிகலா சிறைக்குச் சென்றார்.

NDTV Link

ஆனால், 2017 முதல் 2021 வரையான 4 ஆண்டுகளுக்குள், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்களை அதிமுக.,வை விட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீக்கிவிட்டனர். இதனால், யார் உண்மையான அதிமுக என்ற வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில்தான், சசிகலா தற்போது தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

TOI Link

சசிகலா திரும்பிவிட்ட நிலையில், அதிமுகவில் அவரை சேர்த்துக் கொள்வார்களா, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அவருடன் இணக்கம் காட்டுவார்களா என்றெல்லாம் பலவிதமான பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பிப்ரவரி 06, 2021 அன்று மேற்கண்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் செல்லூர் ராஜூ, ‘’ஓ.பன்னீர்செல்வம் பதவி ஆசையில் திமுகவினருடன் இணைந்துகொண்டு பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவுக்கு எதிராகச் செயல்படுகிறார்,’’ என்று குற்றம் சாட்டுகிறார்.

இதனை வைத்துப் பார்த்தாலே, இது ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று தெளிவாகிறது.

குறிப்பிட்ட வீடியோ 4 ஆண்டுகள் பழையது என்று கூறி பலரும், குறிப்பிட்ட பதிவின் கீழேயே கமெண்ட் பகிர்ந்துள்ளதையும் காண முடிகிறது. இதனை புதிய தலைமுறை தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். இந்த உண்மை உணராமல் பலரும் தற்போது பேசியது போல நினைத்து, நடப்பு அரசியல் சூழலுடன் தொடர்புபடுத்தி ஷேர் செய்வது மற்றவர்களுக்கு குழப்பத்தையே விளைவிக்கும் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் பழைய வீடியோ என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:செல்லூர் ராஜூ 4 ஆண்டுகள் முன்பு பேசிய வீடியோ தற்போது பகிரப்படுவதால் குழப்பம்…

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context