கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் பாஷ்யம் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என்று மெட்ரோ ரயில் நிலையத்தில் எழுதப்பட்டுள்ளதன் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பாஷ்யம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாஷ்யம் என்பது சுதந்திர போராட்ட வீரர் பெயர் என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. நடுவே, சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களை குறிப்பிட்டு அரசியல் தகவலும் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த பதிவை I Support H.Raja என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 பிப்ரவரி 5 அன்று பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திடீரென்று பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. யார் இந்த பாஷ்யம் என்பதை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் வலியுறுத்தினர். பாஷ்யம் என்ற கட்டுமான நிறுவனத்துக்கு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய விளம்பர உரிமம் வழங்கப்பட்டது என்று செய்தி வெளியாகி இருந்த நிலையில், சுதந்திர போராட்ட வீரரின் பெயரை வைத்துள்ளார்கள் என்ற பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பதிவுக்கு பதிலிட்டுள்ள பலரும் சுதந்திர போராட்ட வீரர் பாஷ்யத்தை புகழ்ந்தும், இது போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் கவுரவிக்கப்பட வேண்டும் என்றும் பதிவிட்டு வருவது எந்த அளவுக்கு அவர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை காட்டியது. பலரும் இந்த பதிவை ஷேர் செய்து வரவே உண்மையில் சுதந்திர போராட்ட வீரரின் நினைவாகத்தான் பெயர் வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தோம்.

முதலில், இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சமூக ஊடக பக்கங்களை ஆய்வு செய்தோம். அப்போது, 2021 பிப்ரவரி 7ம் தேதி தி இந்து ஆங்கில இதழில் வெளியான செய்தியை அவர்கள் பகிர்ந்திருந்தனர். அதில், விளம்பர யுக்தி மெட்ரோ நிர்வாகத்துக்கு வருவாயைக் கொடுக்கிறது என்று தலைப்பிட்டிருந்தனர்.

ஏற்கனவே சென்னை நந்தனம், ஏஜி டிஎம்ஸ் ரயில் நிலையங்களுக்கு விளம்பரதாரர் கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது கோயம்பேடு ரயில் நிலையத்துக்கும் விளம்பரதாரர் கிடைத்துள்ளார். மெட்ரோ ரயில் நிலைய தரப்பில் இது பற்றி கேட்ட போது பாஷ்யம் கட்டுமான நிறுவனத்துக்கு ரயில் நிலையத்தில் தங்கள் பெயரை விளம்பரம் செய்துகொள்வதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரயில் நிலையத்தின் பெயர் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I thehindu.com I Archive 2

ஏற்கனவே முத்தூட் நந்தனம் ரயில் நிலையம், ஏஜி டிஎம்ஸ் லலிதா ஜூவல்லாரி ரயில் நிலையம் என்று பெயர் உள்ளது. தற்போது கோயம்பேடுக்கும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. செமி நேமிங் உரிமம் என்பது ரயில் நிலையத்துடன் தங்கள் பிராண்ட் பெயரை சேர்த்து வைத்துக்கொள்ளும் உரிமம் ஆகும்.

கோயம்பேட்டைத் தொடர்ந்து ஷெனாய் நகர், சைதாப்பேட்டை ரயில் நிலையங்களும் விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று மார்க் மெட்ரோ என்ற மெட்ரோ ரயில் பிராண்டிங் நிறுவனத்தின் நிர்வாகி ஆர்.அனந்தகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஷெனாய் நகரின் விளம்பர உரிமையை பில்ராத் மருத்துவமனையும் சைதாப்பேட்டை விளம்பர உரிமையை சிட்டி யூனியன் வங்கியும் பெற்றுள்ளன. இன்னும் சில வாரங்களில் இந்த இரண்டு ரயில் நிலையங்களும் புதிய வர்ணங்களால் அழகூட்டப்படும்" என்று கூறினார் என்று இருந்தது.

இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிலையம் நேரடியாகக் கூறவில்லை என்றாலும், அதை தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டிருப்பதன் மூலம் இதை சென்னை மெட்ரோ ஒப்புக்கொண்டிருப்பது உறுதியாகிறது.

இந்த தகவலை உறுதி செய்ய மார்க் மெட்ரோ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு பேசினோம். தி இந்துவில் வந்துள்ள செய்தியை அப்படியே அவரும் கூறினார். கூடுதலாக, ‘’பாஷ்யம் கன்ஸ்டிரக்‌ஷன் சமீபத்தில் கிரவுன் என்ற பெயரில் புதிய திட்டத்தை தொடங்கினர். அதைத் தொடர்ந்து கோயம்பேடு மெட்ரோவில் விளம்பரம் செய்துள்ளனர். இது புதிது இல்லை. ஏற்கவே நந்தனம், ஏஜி டிஎம்எஸ் ரயில் நிலையங்களில் உள்ளதுதான். டெல்லி, மும்பை போன்ற மற்ற மெட்ரோக்களிலும் இது நடைமுறையில் உள்ளது. மெட்ரோ நிறுவனத்தின் வருவாய்க்காக இப்படி செய்யப்படுகிறது", என்றார்.

தொடர்ந்து தேடியபோது, "ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.3 கோடி என்று பாஷ்யம் கன்ஸ்டிரக்‌ஷன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது", என்று நியூஸ் 18 வெளியிட்ட செய்தி கிடைத்தது. மேலும், பாஷ்யம் கன்ஸ்டிரக்‌ஷனில் கிரவுன் என்ற பெயரில் லோகோ இருப்பதையும் அதன் இணையதளத்தில் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: news18.com I Archive 1 I Archive 2

இதன் மூலம், கோயம்பேடு மெட்ரோவுக்கு சுதந்திர போராட்ட வீரர் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கோயம்பேடு மெட்ரோவுக்கு சுதந்திர போராட்ட வீரர் பாஷ்யம் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சுதந்திரப் போராட்ட வீரர் பாஷ்யம் பெயர் கோயம்பேடு மெட்ரோவுக்கு வைக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False