காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்த ஆயுத குவியல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அறை முழுக்க அதிநவீன ஆயுதங்கள் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "அல் ஷிபா மருத்துவமனையி ல் உள்ள ஆயுதங்கள்-

காசாவில் உள்ள அல் ஷிபா ஹாஸ்பிடலில் இருக்கும் ரகசிய அறைகளில் ஏகப்பட்ட ஆயுதங்களையும் ஹமாஸ் கோமாளிகள் பயன்படுத்தும் உடைகளையும் இஸ்ரேல் ராணுவம் பறிமுதல் செய்து இருக்கிறது. ஆக இஸ்ரேல் கூறியது மாதி ரி அல் ஷிபா மருத்துவமனை ஹமாஸ் கோமாளிகளின் ராணுவ முகாம் என்பது உறுதியாகி விட்டது. இனி அவ்வளவு தான் இடித்து தள்ளி விடுவார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவானது ஃபேஸ்புக்கில் நவம்பர் 16, 2023 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. தற்போது காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் ராணுவம் அல் ஷிபா மருத்துவமனையில் சோதனைகள் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடைத்தது என்று கூறும் வகையில் மருத்துவமனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்தது என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2023 செப்டம்பர் 1ம் தேதி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. ஹீப்ரூ மொழியில் பதிவிடப்பட்டிருந்த அந்த பதிவை கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் மொழிபெயர்த்துப் பார்த்தோம். அதில், ரமலாவில் ஒரு கடையில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ட்வீட்டை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

Archive

இந்த ட்வீட் அடிப்படையில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, இஸ்ரேல் போலீஸ் 2023 ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிட்டிருந்த பதிவு நமக்கு கிடைத்தது. அதில் ரமலாவில் ஒரு இடத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அறிந்து அங்கு சென்ற இஸ்ரேல் போலீஸ் ஆயுதங்களைக் கைப்பற்றியது. மேலும் ஒருவரைக் கைது செய்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அது தொடர்பான செய்திகளும் நமக்குக் கிடைத்தன. அதில் ஆயுத கடத்தல் பிரச்னை அதிகரித்து வருகிறது. ரமல்லாவில் ஒருவர் ஆயுதங்களை கடத்தி விற்பனை செய்வது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்று ஆயதங்களை கைப்பற்றியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2023 செப்டம்பர் 1ம் தேதி ட்விட்டரில் பதிவிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளோம். இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் ஏற்பட்டது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த வீடியோவுக்கும் தற்போது இஸ்ரேல் நடத்திவரும் போருக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

காசாவில் உள்ள அல் ஷிபா மருத்தவமனையில் சிக்கிய ஆயுதங்கள் என்று பரவும் வீடியோ இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:காசா அல் ஷிபா மருத்துவமனையில் சிக்கிய ஆயுதங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False