
முதியவர் ஒருவர் தன்னுடைய 146வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
முதியவர் ஒருவர் படம் மற்றும் 146 என்று பிறந்த நாள் கேக் மீது வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி உள்ளிட்ட படங்களை கொலாஜ் செய்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “1874 இல் பிறந்த இவர் தனது 146 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். நம்முடைய இருதயத்தின் அடிப்பகுதியில் இருந்து அவரை ஆசீர்வதிப்போம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை “சிரிப்பும், சிந்தனையும்” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் M. S. S. Mansoor என்பவர் 2020 டிசம்பர் 15ம் தேதி பகிர்ந்துள்ளார்.
M. S. S. Mansoor போல பலரும் இந்த படத்தை தற்போது பதிவிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஒருவர் 146 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது ஆச்சரியமாக இருந்தது. இது உண்மைதானா என்று ஆய்வு செய்தோம். படத்தில் இருக்கும் முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், இவர் எப்போது தன்னுடைய 146வது பிறந்த நாளைக் கொண்டாடினார் என எந்த ஒரு தகவலும் இல்லை. தற்போது பிறந்த நாள் கொண்டாடும் முதியவருக்கு வாழ்த்து தெரிவித்தது போலப் பதிவு இருந்தது. பலரும் இன்னும் பல ஆண்டுகாலம் வாழ வேண்டும் என்று வாழ்த்து வேறு கூறி இருந்தனர்.
எனவே இந்த முதியவர் பற்றிய விவரத்தை அறிய, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது படத்தில் இருப்பவர் இந்தோனேஷியாவைச் சேர்ந்த மிகவும் வயதான நபர் சோடிமெட்ஜோ என்று தெரிந்தது. தொடர்ந்து தேடியபோது இவர் 2017ம் ஆண்டு இறந்துவிட்டார் என பிபிசி வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது.
அசல் பதிவைக் காண: bbc.com I Archive
அந்த செய்தியைப் பார்த்தோம். அதில், இவர் 1870ம் ஆண்டு பிறந்ததாக கூறுகிறார். ஆனால், இந்தோனேஷியாவில் பிறப்பு பதிவு செய்யும் முறை 1900ம் ஆண்டில்தான் தொடங்கியது என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் வழங்கிய ஆவணங்கள் மற்றும் நேர்காணல் அடிப்படையில் அவர் 1870ல் பிறந்தார் என்று அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. அதே நேரத்தில் இந்தோனேஷிய பிறப்பு பதிவு ஆவணங்களில் தவறுகள் நடந்துள்ளது என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவர் 1870ல் தான் பிறந்தார் என்பதற்கு எந்த ஒரு தகுந்த ஆதாரமும் இல்லாத காரணத்தால் அதிக ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்த நபர் என்ற பெருமையை இவருக்கு கின்னஸ் உலக சாதனை வழங்கவில்லை.
இவர் தன்னுடைய 146வது பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பான செய்தியைத் தேடினோம். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் தி சன் இதழில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படங்கள் இருந்தன. 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தன்னுடைய 146வது பிறந்த நாளைக் கொண்டாடினார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. “தான் பிறந்த தேதி தனக்குத் தெரியாது என்றும், 1880ல் அந்த பகுதியில் சர்க்கரை ஆலை கட்டப்பட்டது தனக்கு நினைவில் உள்ளது” என்றும் அந்த முதியவர் கூறுகிறார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: thesun.co.uk I Archive 1 I guinnessworldrecords.com I Archive 2
கின்னஸ் உலக பதிவு படி உலகில் அதிக ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்த நபராக பிரான்ஸை சேர்ந்த Jeanne Calment உள்ளார். இவர் 122 வயது வரை உயிர் வாழ்ந்துள்ளார். இவரது சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை என கின்னஸ் உலக சாதனை பதிவு கூறுகிறது.
முதியவர் எம்பா கோடா 146 வயது வரை வாழ்ந்தார் என்பது பற்றிய குழப்பம் உள்ளது. அவர் 2017ம் ஆண்டு இறந்துவிட்டார். இருப்பினும் அவர் தற்போது பிறந்த நாள் கொண்டாடுவது போல பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2017ம் ஆண்டு இறந்த முதியவர் படத்தை தற்போது அவர் பிறந்த நாள் கொண்டாடுவது போன்று பதிவிட்டிருப்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title: 2020-ம் ஆண்டில் 146வது பிறந்த நாளை கொண்டாடும் முதியவர் என்று பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: Partly False
