அமிதாப் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் பென்ஷன் அறிவித்தாரா யோகி ஆதித்யநாத்?

அரசியல் சமூக ஊடகம் சினிமா

அமிதாப் பச்சன், அவர் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், அவர் மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருக்கு உ.பி பா.ஜ.க அரசு தலா ரூ.50 ஆயிரம் பென்ஷன் வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

BJP-யின் ஆட்சி ஒரு மானங்கெட்ட ஆட்சி என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு !

Archived link

அமிதாப்பச்சன், ஜெயாபச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் படங்களை வெளியிட்டு அந்த படத்திலேயே, இந்த நால்வருக்கும் மாதம் தலா ரூ.50 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படும் – உ.பி அரசு என்று கூறப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, அப்பாடா இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்த நான்கு பேருக்கும் உதவி கிடைத்துவிட்டது… இனி இந்தியா வல்லரசாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

பி.ஜே.பி-யின் ஆட்சி ஒரு மானங்கெட்ட ஆட்சி என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு என்று பதிவிட்டு ஜெபா என்பவர் 2019 ஏப்ரல் 25ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி ஏராளமானோர் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, நடிகர்களுக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளிவந்தது போன்று இல்லை. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் உண்மைதானா என்று கண்டறிய ஆய்வு மேற்கொண்டோம்.

அமிதாப்பச்சனுக்கு பென்ஷன் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, மேற்கண்ட பதிவு உண்மைதான் என்பதற்கு சில செய்திகள் கிடைத்தன.

அந்த செய்தியை கிளிக் செய்து படித்தபோது, பதிவில் கூறப்பட்டது போன்று பா.ஜ.க ஆட்சியில் இல்லை, அகிலேஷ் யாதவ் ஆட்சிக்காலத்தில் பென்ஷன் அறிவிக்கப்பட்டது உண்மைதான் என்று தெரியவந்தது.

21 அக்டோபர் 2015ல், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கும் தகவல் இதுதான்… உத்தரப் பிரதேச அரசு வழங்கும் மிக உயரிய விருதான யாஷ் பாரதி சம்மான் விருது பெற்ற அனைவருக்கும் மாதம் தலா ரூ.50 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் உள்பட தோராயமாக 150 பேர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பென்ஷன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே இந்த பென்ஷன் தொகையை ஏற்கப்போவது இல்லை என்று அமிதாப் பச்சன் அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “உயரிய விருது பெற்வர்களை கவுரவிக்கும் உத்தரப்பிரதேச அரசின் இந்த திட்டத்தைப் பெரிதும் மதிக்கிறேன். ஆனால்  இந்த பென்ஷன் பணத்தை வாங்கப்போவது இல்லை. அதை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும்படி உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு கடிதம் எழுதப்போகிறேன் என்று அமிதாப்பச்சன் அறிவித்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

2017ம் ஆண்டு நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 325 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. 2017 மார்ச் 19ம் தேதிதான் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்றது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அமிதாப் பச்சன், ஜெயாபச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட யாஷ் பாரதி சம்மான் விருது பெற்றவர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் பென்ஷன் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு 2015ம் ஆண்டு அறிவித்தது உண்மைதான்.

2015ல் இந்த அறிவிப்பை வெளியிட்டது அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சியில்தான். பா.ஜ.க ஆட்சியில் இல்லை. 2017 மார்ச் மாதம் தான் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியே அமைந்தது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், அமிதாப், ஜெயா, அபிஷேக், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நான்கு பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், யாஷ் பாரதி சம்மான் விருதை அமிதாப், ஜெயா, அபிஷேக் மட்டுமே பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதனால், ஐஸ்வர்யா ராய்க்கு இந்த பென்ஷன் திட்டம் பொருந்தாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், சமாஜ்வாடி கட்சி அறிவித்த பென்ஷன்திட்டத்தை, பா.ஜ.க அரசு அறிவித்ததாக விஷமத்தனமாக பதிவிடப்பட்டுள்ளது. மேலும், அமிதாப்பச்சன் குடும்பத்தினருக்கு மட்டும் பிரத்தியேகமாக இந்த அறிவிப்பு செய்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். உண்மையில் உத்தரப்பிரதேச அரசின் உயரிய விருதைப் பெற்ற அனைவருக்கும் இந்த பென்ஷன் திட்டம் பொருந்தும் என்பதுதான் உண்மை. இதன்மூலம், மேற்கண்டஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:அமிதாப் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் பென்ஷன் அறிவித்தாரா யோகி ஆதித்யநாத்?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •