அயோத்தியில் ராமர் கோவில் திறப்புவிழா நடைபெறுவதையொட்டி வருகிற ஜனவரி 22ம் தேதி ராமர் படத்துடன் கூடிய புதிய ரூ.500 நோட்டு வெளியிடப்பட உள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ராமர் படத்துடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டு 22 ஜனவரி 2024 அன்று வெளியிடப்பட உள்ளது என்று வாட்ஸ் அப்பில் பரவிய பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "புதிய 500 ரூபாய் நோட்டு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 16ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

ராமர் கோவில் குடமுழுக்கையொட்டி புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ராமர் புகைப்படம் மற்றும் புதிய ராமர் கோவில் புகைப்படத்துடன் 500 ரூபாய் நோட்டு ஜனவரி 22ம் தேதி வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பை வெளியிட்டதாக செய்தி இல்லை. அப்படி இருக்கும்போது எதன் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.

இந்த தகவல் வெறும் வதந்தி என்று தெரிந்ததால், இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம். முதலில் ரிசர்வ் வங்கி புதிய 500 ரூபாய் நோட்டு வெளியீடு தொடர்பாக அறிவிப்பு ஏதும் வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் இணையதளத்துக்குச் சென்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு அறிவிப்பும் ரிசர்வ் வங்கி இணையதளத்தில் இல்லை.

அடுத்ததாக இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ரூபாய் நோட்டில் உள்ள வரிசை எண்ணுடன் கூடிய 500 ரூபாய் புகைப்படங்கள் இணையதளத்திலிருந்து நமக்குக் கிடைத்தன. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேலின் 6 செ.மீ நீளமுள்ள கையெழுத்திடப்பட்ட ரூபாய் நோட்டு என்று மகாத்மா காந்தியடிகள் புகைப்படத்துடன் கூடிய ரூபாய் நோட்டு படத்தைப் பதிவிட்டிருந்தனர். இந்த புகைப்படத்தை எடுத்து எடிட் செய்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: banknotecoinstamp.com I Archive

இது தொடர்பாக ரிசர்வ் வங்கியை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். சென்னை அலுவலகத்தை தொடர்புகொண்ட போது, இது பற்றி தலைமை அலுவலகத்தில்தான் விவரம் பெற வேண்டும் என்றனர். இதற்குள்ளாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் ரிசர்வ் வங்கி மும்பை அலுவலகத்தின் அதிகாரியை தொடர்புகொண்டு விவரம் பெற்றனர். “இந்த தகவல் தவறானது, பொய் பிரசாரம், இப்படி எந்த புதிய நோட்டையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை” என்று மும்பையைச் சார்ந்த அதிகாரி நம்முடைய மளையாளம் குழுவினரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் வெளியான கட்டுரையை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி ரிசர்வ் வங்கி ராமர் கோவில் மற்றும் ராமர் புகைப்படத்துடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிடுகிறது என்று பரவும் தகவல் தவறானது என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராமர் புகைப்படத்துடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டு வௌியிடப்பட உள்ளது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராமர் படத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு வெளியிடுகிறதா ரிசர்வ் வங்கி?

Written By: Chendur Pandian

Result: False