உ.பி-யில் 165 இடங்களில் வாக்குகளை பிரித்து பாஜக வெற்றிக்கு ஓவைசி உதவினாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில் 165 இடங்களில் ஓவைசி வாக்குகளைப் பிரித்து, பாஜக வெற்றிக்கு காரணமாக அமைந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஓவைசி புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “200 வாக்குகள் வித்தியாசத்தில் 7 தொகுதிகள். 500 வாக்குகள் வித்தியாசத்தில் 23 தொகுதிகள். 1000 வாக்குகள் வித்தியாசத்தில் 49 தொகுதிகள். 2000 வாக்குகள் வித்தியாசத்தில் 86 தொகுதிகள். லாவகமாக… இஸ்லாமியர்களின் ஓட்டைப் பிரித்து… பாஜக அரியணை ஏற உதவிய ஓவைசி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Akbar Thasim என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மார்ச் 11ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

எந்த மாநிலத்தில் என்று குறிப்பிடாமல் ஓவைசி வாக்குகளை பிரித்துவிட்டார் என்று குறிப்பிட்டு பலரும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில், இவர்கள் உத்தரப்பிரதேசத்தை குறிப்பிட்டு பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. சிலர் உத்தரப்பிரதேசம் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உத்தரப்பிரதேச தேர்தலில் 165 இடங்களில் வாக்குகளை பிரித்து பாஜக வெற்றிக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி துணை செய்தார் என்று பகிரப்பட்டுள்ளது. ஓவைசி தனித்து போட்டியிட்டதால் இந்த தகவல் உண்மையாக இருக்கும் என்று கருதி பலரும் இதை பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டது என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது, அவரது கட்சி 97 இடங்களில் போட்டியிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அப்படி இருக்க 165 இடங்களில் வாக்குகளைப் பிரித்தார் என்ற தகவல் தவறானது என்று உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: theprint.in I Archive

அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளபடி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றதா என்று ஆய்வு செய்தோம். தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த தேர்தல் முடிவுகள் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில் மொத்தம் 40 பக்கங்களில் பக்கத்துக்கு 10 தொகுதிகள் வீதம் மொத்தம் 400 தொகுதிகள் தொடர்பான விவரத்தையும், 41வது பக்கத்தில் மூன்று தொகுதிகளுக்கான பட்டியல் என மொத்தம் 403 தொகுதிகளுக்கான விவரத்தை வெளியிட்டிருந்தது.

அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்தோம். மொத்தம் 49 தொகுதிகளில் மட்டுமே 5000க்கும் கீழ் வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது தெரியவந்தது. 200 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. 203, 217, 258 வாக்குகள் வித்தியாசத்தில் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. முறையே 315, 307, 357, 315 வாக்குகள் வித்தியாசத்தில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: results.eci.gov.in I Archive

சமாஜ்வாடி கட்சி முறையே 234, 261 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டு இடங்களிலும், 473 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இப்படி 1000 வாக்குகளுக்கு கீழ் பாஜக, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் 15 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றிருந்தன. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கொடுக்கப்பட்டிருந்த பட்டியலும் தவறானது என்று உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

தொடர்ந்து தேடிய போது பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவு வந்த பிறகும் கூட இதே பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த தேர்தலிலும் அவர் 165 இடங்களில் போட்டியிடவில்லை. இதன் மூலம் உ.பி தேர்தலில் ஓவைசி ஓட்டு பிரித்ததன் மூலம் பாஜக ஆட்சிக்கு வந்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உத்தரப்பிரதேசத்தில் 165 இடங்களில் பாஜக வெற்றி பெற ஓவைசி வாக்கு பிரித்தது தான் காரணம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உ.பி-யில் 165 இடங்களில் வாக்குகளை பிரித்து பாஜக வெற்றிக்கு ஓவைசி உதவினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False