பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்தியாவுடன் இணைய உறுதிமொழி எடுத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

மக்கள் சிலர் ஒன்று கூடி உறுதிமொழி எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்கள் என்ன உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் என்பது புரியவில்லை. நிலைத் தகவலில், "பாக். ஆக்கிரமிப்பகுதியில் இந்தியாவுடன் இணைய சபதம் எடுக்கும் மக்கள். இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிடும் காட்சி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Selvan Selva என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காஷ்மீர் மக்கள் தனி நாடு வேண்டும் என்று போராடி வருகின்றனர். அப்படி இருக்க இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று உறுதிமொழி எடுத்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நமக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. வீடியோவில் ஒருவர் கையில் வைத்திருந்த காகிதத்தில், "Gujjar Bakarwal Jindabad" என்று எழுதப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதன் அடிப்படையில் குஜ்ஜார் பகர்வால் உறுதிமொழி ஏற்பு என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சியுடன் வெளியான செய்திகள் கிடைத்தன. அதில், ஜம்மு காஷ்மீரின் பழங்குடியின மக்கள் இந்தியாவுக்காக தியாகங்கள் செய்யவும் தயாராக இருக்க உறுதி மொழி ஏற்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: india.postsen.com I Archive

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பழங்குடிகளான குஜ்ஜார் பகர்வால் இஸ்லாமியர்கள் இந்தியாவின் சட்ட திட்டங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருப்பதாகவும், தங்கள் இளைஞர்கள் நாட்டுக்காகத் தியாகங்கள் செய்யத் தயார் நிலையில் இருப்பதாகவும் உறுதிமொழி எடுத்தனர். குஜ்ஜார் பகர்வால் மக்கள் நாட்டின் பாதுகாப்புக்குத் துணை நிற்கவும் உறுதி மொழி எடுத்தனர் என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

https://twitter.com/jindadilkashmir/status/1693862205257904248

Archive

இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடிய போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் எக்ஸ் தள (ட்விட்டர்) பதிவுகள் வெளியிடப்பட்டிருப்பதும் தெரிந்தது. செய்தி ஊடகங்கள் இந்த ட்வீட்களை வெளியிட்டிருந்தன.

Gurjar Bakarwal @Gurjarbakarwal என்ற எக்ஸ் தள பதிவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதில் தங்களின் பழங்குடியினர் தகுதி பாதுகாக்கப்படவும் எதிரிகளின் தாக்குதலிலிருந்து நாட்டைக் காக்கவும் குஜ்ஜார் பகர்வால் இளைஞர்கள் உறுதிமொழி எடுத்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

குஜ்ஜார் பகர்வால் பழங்குடியினர் பற்றித் தேடிய போது இவர்கள் பெருமளவில் ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மூன்றாவது பெரிய பழங்குடியினர் என்று தெரியவந்தது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய உறுதிமொழி எடுத்ததாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

காஷ்மீரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த தியாகத்தையும் செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட வீடியோவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய சபதம் ஏற்பு என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்தியாவுடன் இணைய பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் சபதம் மேற்கொண்டார்களா?

Written By: Chendur Pandian

Result: False