FACT CHECK: டெல்லி அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரை சூட்டினாரா மோடி?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லியின் பிரபலமான அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரைப் பிரதமர் மோடி சூட்டினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிபின் ராவத் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “டில்லி சாலைக்கு தளபதி பிபின் இராவத் பெயர். டில்லியில் உள்ள அக்பர் சாலைக்கு இராணுவ தளபதி பிபின் இராவத் பெயர் சூட்டினார் பிரதமர் மோடி” என்று இருந்தது. இந்த பதிவை Ram Vengat என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2021 டிசம்பர் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் சமீபத்தில் குன்னூர் வந்தபோது நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மக்களின் ஜென்ரல் என்று சொல்லும் அளவுக்கு அவர் மீது பலரும் அதீத அன்பை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் புகழ் பெற்ற அக்பர் சாலையின் பெயரை பிபின் ராவத் சாலை என்று பிரதமர் மோடி பெயர் மாற்றம் செய்தார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அக்பர் சாலை என்பது காங்கிரஸ் கட்சி அமைந்திருக்கும் சாலையாகும். டெல்லியின் மிக முக்கியமான பகுதி. எனவே, இதுபற்றி ஆய்வு செய்தோம்.

பிரதமர் மோடி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அனைத்து ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியையும் படித்ததாக நினைவில் இல்லை. எனவே, இது தொடர்பாக கூகுளில் தேடிப் பார்த்தோம். எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், அக்பர் சாலையின் பெயரை பிபின் ராவத் சாலை என்று மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை விடுத்ததாகத் தினமலரில் செய்தி வெளியாகி இருந்தது.

அசல் பதிவைக் காண: Dinamalar I Archive

பிரதமர் மோடி இப்படி ஏதும் அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் உடலுக்கு மரியாதை செலுத்தியது தொடர்பான தகவல் இருந்தது. மற்றபடி உத்தரப்பிரதேசத்தில் நலத்திட்டங்கள் தொடக்கம், ராஜாஜி பிறந்த நாள் நினைவு உள்ளிட்ட விஷயங்கள் இருந்தன. டெல்லியில் உள்ள அக்பர் சாலையின் பெயரை பிபின் ராவத் சாலை என்று மாற்றியதாக எந்த ஒரு பதிவையும் அவர் வெளியிடவில்லை.

அசல் பதிவைக் காண: Archive 1 I Archive 2

டெல்லி அக்பர் சாலையின் பெயரை மாற்ற அரசு திட்டமிட்டு வருகிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த சாலையின் பெயரை மகாரானா பிரதாப் மார்க் என்று மாற்ற வேண்டும் என்று 2016ம் ஆண்டு முதல் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்று செய்தி கிடைத்தது. மேலும் 2018ம் ஆண்டு அக்பர் சாலை என்று இருந்த பெயர் பலகை மீது இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மகாரானா பிரதாப் மார்க் என்று போஸ்டர் ஒட்டி வழிபாடு நடத்தியதாகவும், போலீசார் வந்து அந்த போஸ்டரை கிழித்ததாகவும் செய்தி கிடைத்தது. மேலும், டெல்லி மாநகராட்சி அளித்த புகார் அடிப்படையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்ததாகவும் தகவல் கிடைத்தது.

அசல் பதிவைக் காண: thehindu.com I Archive

இதற்கு முன்பு டெல்லியில் சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அது தொடர்பாக தேடினோம். டெல்லியில் தற்போதுள்ள டாக்டர் அப்துல் கலாம் சாலை முன்பு அவுரங்கசீப் சாலை என்று அழைக்கப்பட்டது என்றும், அந்த சாலையின் பெயரை டெல்லி மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி மாற்றியதாகவும் செய்திகள் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive

இதுதொடர்பாக மத்திய அரசின் முதன்மை செய்தித் தொடர்பாளரும், பிஐபி-யின் பிரின்சிபில் டைரக்டர் ஜெனரலுமான (Principal Spokesperson, Government of India & Principal Director General of Press Information Bureau) ஜெய்தீப் பட்நாகரிடம் கேட்டோம். அவர், “அக்பர் சாலையின் பெயரை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை”, என்றார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், டெல்லியில் உள்ள அக்பர் சாலையின் பெயரை பிபின் ராவத் சாலை என்று பிரதமர் மோடி மாற்றினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லியில் உள்ள அக்பர் சாலையின் பெயரை ஜெனரல் பிபின் ராவத் சாலை என்று பிரதமர் மோடி மாற்றினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:டெல்லி அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரை சூட்டினாரா மோடி?

Fact Check By: Chendur Pandian 

Result: False