FACT CHECK: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியை ஸ்பெயின் சுட்டு வீழ்த்திய வீடியோவா இது?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

பெண் ஒருவரை பணயமாகப் பிடித்து வைத்து மிரட்டிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி ஒருவனை ஸ்பெயின் போலீசார் சுட்டுக்கொன்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

59 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. பெண் ஒருவரை துப்பாக்கி முணையில் இளைஞன் ஒருவன் பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளான். திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. அந்த இளைஞன் சுருண்டு விழுகிறான். நிலைத் தகவலில், “ஒரு பெண்ணை பணயமாக பிடித்துக் கொண்டிருந்த ISIS தீவிரவாதியை துல்லியமாக சுட்டு வீழ்த்தும் ஸ்பெயின் போலீஸ்.

Isis terrorist with kidnapped woman shot dead by Spain police sharp shooters…What a shot in fraction of second amazing to watch” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Maghbool என்பவர் 2020 ஆகஸ்ட் 12 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெண் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி பிடித்து வைத்ததாக கூறப்பட்டுள்ளது. அவனை ஸ்பெயின் போலீசார் சுட்டுக் கொன்றதாக குறிப்பிட்டுள்ளனர். அந்த பெண்ணை பார்க்க மத்திய, தென் அமெரிக்க நாட்டைச் சார்ந்தவர் போல உள்ளார். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஈராக், சிரியா நாட்டில் இருந்து செயல்பட்டனர். உலகின் பல பகுதிகளில் அவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தாலும் இது ஸ்பெயினில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜில் தேடிய போது வெனிசுலாவின் Cúa என்ற இடத்தில் 1998ம் ஆண்டு நிகழ்ந்த பணயக் கைதி சம்பவம் என்று குறிப்பிட்டு விக்கிப்பீடியா செய்தி நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: Search Link I wikipedia.org I Archive

அதில் 1998ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி வெனிசுலா நாட்டில் உள்ள Cúa என்ற நகரில் உள்ள பேக்கரியில் 18 வயதான ஹெக்டர் டுவார்த்தே என்ற இளைஞர் கைத்துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டான். அங்கு சில அசம்பாவித சம்பவங்கள் நிகழவே மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அப்போது பெண்மணி ஒருவரை பணயக் கைதியாக பிடித்து வைத்து தப்பித்துச் செல்ல முயன்றான்.

போலீசாருக்கும் அவனுக்கும் இடையே ஏழு மணி நேரத்துக்கு வாக்குவாதம் நடைபெற்றது. இறுதியில் தூரத்தில் இருந்து அவனது தலையில் சுட்டு அந்த பெண்ணை மீட்டனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: military.com I Archive I vimeo.com

இது தொடர்பாக வெளியான செய்தி, வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. இதன் மூலம் இந்த இளைஞர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கவாதி இல்லை என்பதும், ஸ்பெயின் போலீசார் அவனை சுட்டுக் கொன்றார்கள் என்றும் பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியை ஸ்பெயின் போலீசார் சுட்டுக் கொன்ற காட்சி என்று பகிரப்படும் வீடியோ 20 ஆண்டுகளுக்கு முன்பு வெனிசுலாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியை ஸ்பெயின் சுட்டு வீழ்த்திய வீடியோவா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False