
ஊடக ஒவ்வாமை இருப்பதால் அமெரிக்க பயணத்தின்போது ஊடக சந்திப்புகள் ஏதும் வேண்டாம் என்று கமலா ஹாரிசிடம் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடன் இந்திய பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தனக்கு கடந்த ஏழு வருடங்களாக ஊடக ஒவ்வாமை இருப்பதால் அமெரிக்கப் பயணத்தில் ஊடக சந்திப்புகள் ஏதும் வேண்டாம் என்று கமலா ஹாரிசிடம் பிரதமர் மோடி கோரிக்கை” என்று இருந்தது.
இந்த பதிவை Allwin Raaj என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2021 செப்டம்பர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி ஊடகவியலாளர்கள் சந்திப்பை தவிர்த்து வருவது புதிய விஷயம் இல்லை. வெளிநாட்டு தலைவர்கள் உடனான சந்திப்பு, நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கும். திடீரென்று வாருங்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கலாம் என்று எல்லாம் அழைத்து வருவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, பகிரப்படும் தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.
பிரதமர் மோடி அப்படி கோரிக்கை விடுத்தார் என்று அமெரிக்க அரசோ, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸோ கூறவில்லை. அப்படி அமெரிக்க அரசு அறிவித்திருந்தால் இந்திய ஊடகங்களில், குறிப்பாக தமிழ் ஊடகங்களில் அது பற்றி மிக விரிவாக செய்தி வெளியிட்டிருப்பார்கள். காட்சி ஊடகங்களில் விவாதமே நடத்தியிருப்பார்கள். இதன் மூலம் இந்த தகவல் உண்மையானது இல்லை என்று புரிந்துகொள்ள முடிகிறது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பு பற்றிய விவரங்களைத் தேடினோம். அப்போது கிட்டத்தட்ட பத்திரிகையாளர் சந்திப்பு போன்று இருவரும் உரையாடிய விவரம் நமக்கு கிடைத்தது. இருதரப்பு சந்திப்பு தொடர்பாக இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கிய விவரம் நமக்கு கிடைத்தது. இதன் மூலம், பத்திரிகையாளர் சந்திப்பு வேண்டாம் என்று மோடி கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive
அதே போன்று நியூஸ் கார்டும் உண்மையானது இல்லை. இதில் உள்ள தமிழ் ஃபாண்ட் புதிய தலைமுறை வழக்கமாக வெளியிடும் தமிழ் ஃபாண்ட் இல்லை. பின்னணி லோகோ இல்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தின. இதை பலரும் ஷேர் செய்யவே, இது போலியானது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை நடத்தினோம்.
நியூஸ் கார்டில் செப்டம்பர் 24ம் தேதி வெளியானதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, 2021 செப்டம்பர் 24ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று பிரதமர் மோடி, கமலா ஹாரிஸ் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: Facebook
அதில், “கமலா ஹாரிஸை வரவேற்க இந்தியர்கள் காத்திருப்பதால் விரைவில் இந்தியா வரவேண்டும் – பிரதமர் மோடி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து, விஷமத்தனமான கருத்தைச் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியானது. இதை மேலும் உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் இது போலியானது என்பதை உறுதி செய்தனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தனக்கு ஊடக ஒவ்வாமை இருப்பதால் ஊடக சந்திப்புகள் ஏதும் வேண்டாம் என்று கமலா ஹாரிசிடம் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று பிரதமர் மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசிடம் கூறினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஊடக சந்திப்பு வேண்டாம் என்று கமலா ஹாரிஸிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டாரா?
Fact Check By: Chendur PandianResult: False
