ஈ.வெ.ராமசாமி பொியாரை செருப்பால் அடித்த பெண் என்று ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தந்தை பொியார் மற்றும் ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து புகைப்பட பதிவு ஒன்றை உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், "செருப்பால் அடித்த சிங்கப்பெண். முதன்முதலில் பெரியாரை செப்பால் அடித்த சிங்கப்பெண் இந்த பொன்னம்மாள் பாட்டிதான்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெரியாரை செருப்பால் அடித்த பொன்னம்மாள் பாட்டி என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த பொன்னம்மாள் யார், எதற்காக பெரியாரை அடித்தார், இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று எந்த தகவலையும் அளிக்கவில்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

பெரியாரை அடித்த பொன்னம்மாள் பாட்டி என்று கூகுளில் டைப் செய்து தேடிப் பார்த்தோம். இது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது பற்றி அர்ஜுன் சம்பத் போன்ற தீவிர வலதுசாரிகள் தொடர்ந்து பேசி வந்திருப்பார்கள். ஆனால், அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை. இனி பேசி இந்த வதந்தியை உண்மையாக்க முயற்சி செய்வார்கள்.

பெரியார் பொன்னம்மாள் என்று கூகுளில் தேடிய போது, பெரியாரின் உறவினர் பெயர் பொன்னம்மாள் என்று மட்டும் வந்தது. வேறு எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. இந்த தகவல் தொடர்பாக திராவிடர் கழக மூத்த வழக்கறிஞர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். "சங்கிங்க செய்யும் வழக்கமான விஷமம் இது. அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை" என்றார்.

சரி படத்தில் உள்ள மூதாட்டியின் புகைப்படம் தொடர்பாக தேடிப் பார்க்கலாம் என்று கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். நம்முடைய தேடலில், யார் என்று அடையாளம் கூற முடியாத மூதாட்டி புடவையில் என்று குறிப்பிட்டு சில புகைப்படங்களை விற்பனை செய்யும் இணையதளங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் புதுசேரியில் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


உண்மைப் பதிவைக் காண: dreamstime.com I Archive 1 I shutterstock.com I Archive 2

Catherinelprod Catherine என்ற ஐடி கொண்ட கேத்தரின் என்ற புகைப்பட கலைஞர் இந்த புகைப்படத்தை புதுசேரியில் 2017ம் ஆண்டு எடுத்தார் என்றும் அந்த இணையதளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த பெண் என்று வேறு ஒரு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பெண்மணியைப் பற்றி வேறு எந்த தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை.

2015ம் ஆண்டில் பெரியாரின் புகைப்படத்தைத் தீவிர இந்துத்துவா கட்சியைச் சார்ந்தவர்கள் செருப்பால் அடித்தும், புகைப்படத்தின் மீது சிறுநீர் கழித்தும் அவமரியாதை செய்ததாக சில பதிவுகள் நமக்குக் கிடைத்தன. மற்றபடி பெரியாரை நேரடியாக செருப்பால் அடித்த பெண் என்று எந்த பதிவும் நமக்குக் கிடைக்கவில்லை.


உண்மைப் பதிவைக் காண: eraaedwin.com I Archive

புதுச்சேரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை, புகைப்பட கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்து விஷமத்தனமான தகவலை சேர்த்த சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தெளிவாகிறது. பெரியாரை இழிவுபடுத்திவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. எந்த ஆதாரத்தையும் அவர்களும் அளிக்கவில்லை, அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த செய்தியும் நமக்கும் கிடைக்கவில்லை. சாலையில் நடந்து சென்ற யாரோ ஒரு மூதாட்டி என்று இந்த புகைப்படத்தை எடுத்தவர் புகைப்படம் பற்றிய குறிப்பு பகுதியில் பதிவு செய்துள்ளார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

புகைப்படங்களை விற்பனை செய்யும் இணையதளங்களில் இருந்து மூதாட்டி ஒருவரின் புகைப்படத்தை எடுத்து, இவர் தான் பெரியாரை செருப்பால் அடித்தவர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel
Claim Review :   பெரியாரை செருப்பால் அடித்த பொன்னம்மாள் பாட்டி என்று பரவும் தகவல் உண்மையா?
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE