
காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை பிரியங்கா காந்தி பெருக்கி அகற்றினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தரையில் வரையப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தைப் பெருக்கி சுத்தம் செய்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மதிப்பிற்குரிய பிரியங்கா காந்தி அவர்கள் அறையில் உள்ள காங்கிரஸ் கட்சியினை கூட்டி சுத்தம் செய்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை Reddiyarchatram North என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 அக்டோபர் 4ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார். அவரை அனுமதிக்காத உத்தரப்பிரதேச போலீசார், பிரியங்கா காந்தியை ஒரு விருந்தினர் மாளிகையில் வீட்டு சிறையில் வைத்தனர். அந்த அறையை பிரியங்கா காந்தி சுத்தம் செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

அசல் பதிவைக் காண: dinamani.com I Archive
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பாளர்கள் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தைப் பெருக்கி சுத்தம் செய்தார் என்று தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. மார்பிங் முறையில் எடிட் செய்து உருவாக்கப்பட்ட அந்த வீடியோ போலியானது என்பதை உறுதி செய்ய தகுந்த ஆதாரங்களைத் தேடி ஆய்வு செய்தோம்.
பிரியங்கா காந்தி தரையை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த வீடியோ அனைத்து முன்னணி மற்றும் சிறிய ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. அவற்றைத் தேடி எடுத்தோம். ஊடகங்களில் வெளியானதைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது, அக்டோபர் 4, 2021 அன்று இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதில் அறையை பிரியங்கா காந்தி சுத்தம் செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் சின்னம் அந்த அறையின் தரையில் வரைந்து வைக்கப்படவில்லை.
இதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தரையில் வரையப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அழித்தார் என்று பகிரப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டது, போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தரையில் வரையப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை பிரியங்கா காந்தி அழித்தார் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:காங்கிரஸ் கட்சி சின்னத்தை அழித்தாரா பிரியங்கா காந்தி?
Fact Check By: Chendur PandianResult: Altered
