
சீதாராம் யெச்சூரி ஒரு கிறிஸ்தவர் என்றும் இத்தனை நாட்களாக இந்து பெயரை வைத்து ஏமாற்றி வந்துள்ளார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சீதாராம் யெச்சூரியின் இறுதி மரியாதை புகைப்படத்துடன் ஆங்கிலத்தில் ஒருவர் வெளியிட்ட ட்வீட் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் ‘’சீதாராம் யெச்சூரியின் மதம் கிறிஸ்தவம் என்றும், இந்து பெயரை வைத்து எத்தனை பேரை ஏமாற்றியிருப்பார் பாருங்கள்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சீதாராம் யெச்சூரி இவன் ஒரு கிரித்தவன், இந்துப் பெயருடன் இத்தனை நாள் ஏமாற்றி வந்துள்ளான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்ட வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சிபிஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி உடல் நலக் குறைவு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவரது உடலை சவப்பெட்டியில் வைத்திருந்தனர். இதை வைத்து அவர் கிறிஸ்தவர் என்பது போல தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர். பொதுவாக கம்யூனிஸ்ட்டுகள் மதம் சாராதவர்களாக இருப்பார்கள். சீதாராம் யெச்சூரி கிறிஸ்தவராக மாறிவிட்டாரா, அவரது உடல் அடக்கம் கிறிஸ்தவ முறைப்படி நடந்ததா என்று ஆய்வு செய்தோம்.
சீதாராம் யெச்சூரி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இதை அவரே வெளிப்படையாக நாடாளுமன்றத்திலேயே கூறியுள்ளார். மேலும் தன்னை நாத்திகன் என்று அவர் கூறியுள்ளார். அப்படி இருக்க ஒரே ஒரு சவப்பெட்டியை மட்டும் வைத்துக்கொண்டு அவரது மதத்தை எதன் அடிப்படையில் உறுதி செய்தார்கள் என்று தெரியவில்லை.
சரி, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படம் கிறிஸ்தவ முறைப்படி அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிய போது, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் யெச்சூரிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்டது என்று செய்திகள் கிடைத்தன. இது தொடர்பான வீடியோவும் நமக்குக் கிடைத்தது. அதில், கம்யூனிஸ்ட்டுகள் எழுப்பக்கூடிய கோஷத்தை எழுப்பி சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்தியதைக் காண முடிந்தது.
மேலும் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது தொடர்பான பதிவைத் தேடினோம். கேரள முதல்வர் பினராயி விஜய் இது தொடர்பாக பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் என்றால் உடலை புதைக்க வேண்டும். மீண்டும் உயிர்த்தெழும் நம்பிக்கை உள்ளவர்கள் கிறிஸ்தவர்கள். அப்படி இருக்க உடலை தானமாக வழங்க விரும்பமாட்டார்கள். எனவே, கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது என்ற தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.
மேலும் உறுதி செய்துகொள்ள இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பிலிருந்து சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினருமான பிரகாஷ் காரத்திடம் பேசினோம். அப்போது அவர், ” சீதாராம் யெச்சூரி இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தாலும், எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லாதவர், உண்மையான கம்யூனிஸ்ட். அவர் தனது செயல்பாட்டில் தீவிர நாத்திகராக இருந்தார். யெச்சூரியின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. அவரது விருப்பப்படி, உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. அவரது உடலுக்கு எந்த மதச் சடங்கும் செய்யப்படவில்லை” என்றார்.
நம்முடைய ஆய்வில் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்திய காட்சியை கிறிஸ்தவ மதச் சடங்கு என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. யெச்சூரி ஒரு நாத்திகர் என்று அவர் சார்ந்த கட்சித் தலைவர் உறுதி செய்துள்ளார். கிறிஸ்தவம் அல்லது வேறு எந்த ஒரு மத சடங்கு செய்து யெச்சூரியின் உடல் அடக்கம் செய்யப்படவில்லை. சீதாராம் யெச்சூரி விருப்பப்படி அவரது உடல் மருத்துவ ஆய்வுக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மேற்கண்ட தகவல் தவறான ஒன்று, என தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சீதாராம் யெச்சூரி ஒரு கிறிஸ்தவர் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!
Fact Check By: Chendur PandianResult: False
