லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோடி சந்தித்த புகைப்படங்கள் வெளியானது. பிரதமர் மோடி சந்தித்தது ராணுவ வீரர்களே இல்லை, பா.ஜ.க தொண்டர்கள் என்று குறிப்பிட்டு சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பிரதமர் மோடி சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும் புகைப்படம்,  பா.ஜ.க பிரமுகருடன் மோடி இருக்கும் புகைப்படத்தை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “அப்போ அவங்க காயம்பட்ட ராணுவவீரர்கள் இல்லையா…? சங்கிப் பயலுகளைத்தான் வச்சு போட்டோஷூட் நடத்துனீங்களா ஆபீசர்… ஏமாத்துறதுக்கு ஒரு அளவு இல்லையா…?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Shajahan Banu என்பவர் 2020 ஜூலை 7ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா – சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்த இந்திய வீரர்களை பிரதமர் மோடி சென்று சந்தித்ததை வைத்து பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்து, வேதனையும் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ராணுவம் அளித்த விளக்கத்தை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில், “பிரதமர் நரேந்திர மோடி நேற்று லேவில் உள்ள பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்த போது பார்வையிட்ட மருத்துவமனை வசதியின் நிலை குறித்து சில பகுதிகளில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நமது துணிச்சலான ஆயுதப்படைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் தவறான தகவல்கள் முன்வைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. 

கொரோனா நெறிமுறைகளின் படி பொது மருத்துவமனையின் சில வார்டுகளைத் தனிமைப்படுத்தும் வசதிகளுடையதாக மாற்ற வேண்டும். எனவே, பொதுவான பயிற்சி ஆடியோ வீடியோ ஹால் ஆகப் பயன்படுத்தப்பட்ட அரங்கம், ஒரு வார்டாக மாற்றப்பட்டது, ஏனெனில் இந்த மருத்துவமனை கோவிட் சிகிச்சைக்கான மருத்துவமனையாகவும் செயல்பட்டது.

கோவிட் பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கால்வானில் இருந்து வந்ததிலிருந்து காயமடைந்த வீரர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைமை இராணுவத் தளபதி ஜெனரல் எம். எம். நாரவனே மற்றும் ராணுவத் தளபதியும் அதே இடத்தில் காயமடைந்த வீர்ர்களை பார்வையிட்டனர்” என கூறப்பட்டு இருந்து.

Archived Link

முதலில் அந்த இடத்தைப் பற்றி சந்தேகத்தைக் கிளப்பியவர்கள், இப்போது வீரர்களைப் பற்றி சந்தேகம் கிளப்பியுள்ளனர். அவர்கள் வீரர்கள் இல்லை, பா.ஜ.க நிர்வாகிகள் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. படத்தைப் பார்க்கும்போது இரண்டும் வேறு வேறு நபர்கள் என்று தெரிகிறது. சீக்கியர்கள் கட்டாயம் அணிய வேண்டிய வளையத்தை எல்லாம் சுட்டிக் காட்டி ஆதாரம் கிடைத்துவிட்டது என்பது போல பதிவிட்டிருப்பதைக் கண்டு சிரிப்புதான் வந்தது. மருத்துவ மனையில் உள்ள பஞ்சாபை சார்ந்த ராணுவ வீரர் முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளார். பிறகு எந்த ஆதாரம் அடிப்படையில் இவர்தான் பா.ஜ.க நிர்வாகி என்று குறிப்பிட்டார்கள் என்று புரியவில்லை.

உண்மையில் மோடியுடன் ராணுவ மருத்துவமனையில் இருப்பவரும், ட்விட்டர் பக்கத்தில் மோடியுடன் எடுத்த படத்தை பகிர்ந்த பஞ்சாபை சார்ந்தவரும் ஒருவர்தானா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

ட்விட்டர் ஐடி-யில் உள்ள Tajinder Pal Singh Bagga பெயரை டைப் செய்து தேடியபோது அது டெல்லி பா.ஜ.க செய்தித் தொடர்பாளரின் ட்விட்டர் பக்கம் என்பது தெரியவந்தது. உள்ளே பார்த்தபோது, இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திக்கு அவர் பதில் அளித்து வருவதைக் காண முடிந்தது. மேலும், வேறு சில மொழிகளில் வெளியான உண்மை கண்டறியும் ஆய்வுக் கட்டுரையையும் அவர் ஷேர் செய்திருந்தார்.

கையில் சீக்கியர்கள் போடும் வளையத்தைக் குறிப்பிட்டு இருவரும் ஒருவரே என்று குற்றம்சாட்டப்பட்டிருந்ததால், பிரபலமான சீக்கியர்கள் புகைப்படங்களை எல்லாம் ஷேர் செய்து அவர்கள் கையில் வளையம் இருப்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். அதிலும் குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் படத்தில் இருவரின் கையிலும் வளையம் இருப்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.

Archived Link

ராணுவ வீரரையும் தஜீந்தர் பால் சிங் பக்காவையும் தொடர்புபடுத்தி ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு “உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். ஒவ்வொரு சீக்கியரும் கடா (வளையம்) அணிவர். குருகோவிந்த் அவர்கள் கொடுத்தது ஒவ்வொரு சீக்கியரும் கட்டாயம் அணிந்திருப்பர். இதன் மூலம் உங்களை நீங்களே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் இந்திய எதிர்ப்பு முகத்தைக் காட்டி வருகின்றீர்கள்” என்று அவர் கூறியிருந்தார். இதன் மூலம் படத்தில் இருப்பது தான் இல்லை என்று தஜீந்தர் சிங் உறுதிபடுத்தியுள்ளார். 

எல்லா சீக்கியர்களும் வளையம் அணிவது வழக்கமான ஒன்று. அதை வைத்து அவர்கள் இருவரும் ஒன்று என்று கூறுவது தவறானது. மேலும், இருவரது உருவ ஒற்றுமையையும் சரியாக ஆராய முடியவில்லை. ஆனால், முகத்தைப் பார்க்கும்போது இருவரும் வேறு வேறு என அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் லே-வில் பிரதமர் மோடி சந்தித்தது ராணுவ வீரர் இல்லை, பா.ஜ.க நிர்வாகி என்று கூறப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி!

  1. My deep concern….. I will check whenever I post first…my question is Why don’t people’s of fact check check a incident in karaikudi of electricity board worker died while he was climbing…. Fact is in the pole rod should be 12mm but now a days its like nothing can you people’s fact check…..

Comments are closed.