வந்தே பாரத் ரயில் கண்ணாடியை உடைக்கும் நபர்; உண்மை விவரம் என்ன?
‘’வந்தே பாரத் ரயில் கண்ணாடியை உடைக்கும் இந்த நபரை தண்டிக்க வேண்டும்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இந்த பதிவில் ‘’ *நமது தேசத்தின் வந்தே பாரத் ரயிலை சுத்தியல் மூலம் உடைக்கும் இவன் யார் 👆👆👆😡😡* கண்டுபிடித்து தண்டிக்குமா காவல்துறை😅😅😅😅😅,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. அதில், ஒருவர் சுத்தியலால் ரயில் கண்ணாடியை உடைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில் இருந்து, ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுதொடர்பாக, இந்தியில் வெளியிடப்பட்ட X வலைதள பதிவு ஒன்றுக்கு, ரயில்வே சார்பாக ஒருவர் விளக்கம் அளித்ததையும் கண்டோம்.
மேலும், இந்திய ரயில்வே ஆர்வலர் (Trains of India @trainwalebhaiya) ஒருவர் வெளியிட்ட X வலைதள பதிவின் லிங்க் ஒன்றும் கிடைத்தது. அந்த பதிவில், ‘வந்தே பாரத் ரயிலில் பழுதடைந்த கண்ணாடிகளை உடைத்து அகற்றிவிட்டு, புதிய கண்ணாடியை பொருத்தும் காட்சி இது,’ என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், இது குஜராத்தில் எடுக்கப்பட்ட வீடியோ, எனவும் தெரியவந்தது.
இதுபற்றி Western Railway மக்கள் தொடர்பு அதிகாரியிடம் நாம் கேட்டபோது, ‘’ ரயில்வே சார்பாக, ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வழக்கமான ரிப்பேர் பணிதான் இது. ஆனால், ரயில்வே பணிகளின்போது வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி, இந்த வீடியோவை எடுத்த ஒப்பந்த பணியாளர் இதனை முதலில் இன்ஸ்டாகிராமில் பகிர, மற்றவர்களும் எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது மட்டுமின்றி, சிலர் இதற்கு மதச்சாயம் பூசி தேவையற்ற வதந்திகளையும் பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தார்.
இந்த சுத்தியலால் ரயில் கண்ணாடியை உடைக்கும் வீடியோவில் இருப்பவர் இன்ஸ்டாகிராமில் singare_mahi_manish என்ற ஐடி.,யில் இயங்கும் நபர் ஆவார். இதனை India Today ஊடகம் ஏற்கனவே தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ ‘’குஜராத்தில், வந்தே பாரத் ரயிலில் பழுதடைந்த கண்ணாடிகளை உடைத்து அகற்றிவிட்டு, புதிய கண்ணாடியை பொருத்தும் காட்சி,’’ என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram