ஒரு லட்ச ரூபாய் நாணயம் வெளியிடும் மத்திய அரசு?- பல ஆண்டுகளாக பரவும் தகவல்

அரசியல் சமூக ஊடகம்

மக்களின் நலனுக்காக புதிதாக ஒரு லட்ச ரூபாய் நாணயத்தை இந்திய அரசு வெளியிட உள்ளது என்று புகைப்படம் ஒன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Coin 2.png
Facebook LinkArchived Link

ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு உள்ள ஆனால், ஒரு லட்சம் என்று எண்ணால் எழுதப்பட்ட நாணயத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “நமது இந்திய அரசு மக்கள் நலனையும் தேசநலனையும் கருத்தில் கொண்டு புதிதாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசு COIN.வெளியிட்டுள்ளது.அதை பார்போம் பகிர்வோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, 2014ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி Bhagawan Swamigal என்பவர் வெளியிட்டுள்ளார். இப்போதும் இந்த பதிவு ஷேர் ஆகி வருகிறது.

உண்மை அறிவோம்:

நாட்டின் நலனுக்கா, மக்களின் நலனுக்காக ஒரு லட்ச ரூபாய் நாணயம் வெளியிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் 2014ம் ஆண்டில் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் ஒரு லட்ச ரூபாய் நாணயம் வெளியாகவில்லை. மேலும், படத்தில் உள்ள நாணயம் போலியாக மார்ஃபிங் முறையில் உருவாக்கப்பட்டது போன்று இருந்தது. அரசு வழக்கமாக வெளியிடும் 100 ரூபாய் நினைவு நாணயங்களை கொண்டு இந்த காயின் மார்ஃபிங் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தோன்றியது.

நாட்டில் 10 ரூபாய் நாணயமே பல இடங்களில் வாங்க மறுக்கின்றனர். அதிக அளவில் போலி 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் விடப்பட்டதாக வதந்திகள் பரவின. ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்த பிறகும் கூட இன்னும் பல இடங்களில் 10 ரூபாய் நாணயம் வாங்குவதில் தயக்கம் நீடிக்கிறது.

இந்த நிலையில் ஒரு லட்ச ரூபாய் நாணயம் என்றால் கேட்கவே வேண்டாம்… ஆளாளுக்கு லட்ச ரூபாய் நாணயத்தை தயாரித்து வெளியிட ஆரம்பித்து விடுவார்கள்.

ஒவ்வொரு நாணயத்தையும் உருவாக்க ரிசர்வ் வங்கி எவ்வளவு செலவு செய்கிறது என்பதை தெரிந்துகொண்டால், ஒரு லட்ச ரூபாய் நாணயம் வெளியாக வாய்ப்புள்ளதா என்பதை மக்களே புரிந்துகொள்ள முடியும். ஒரு ரூபாய் நாணயத்தை உருவாக்க 1.11 ரூபாய் செலவு ஆகிறதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதேபோல் 2 ரூபாய் நாணயத்தை உற்பத்தி செய்ய 1.28 ரூபாயும், 5 ரூபாய் நாணயத்தைத் தயாரிக்க 3.69 ரூபாயும், 10 ரூபாய் நாணயத்தைத் தயாரிக்க 5.54 ரூபாய்ச் செலவாகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திArchived Link

இவ்வளவு செலவு செய்து நாணயம் உருவாக்கினாலும் அதை பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. இந்தியாவின் ஐந்து ரூபாய் நாணயத்தை உருக்கி, 6 ரேசர் பிளேடுகளை வங்கதேசத்தில் உருவாக்குகின்றனர். ஒரு பிளேடை 2 ரூபாய்க்கு விற்று (12 ரூபாய் கிடைக்கிறது) லாபம் பார்த்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது ஒரு லட்ச ரூபாய் நாணயம் என்பது சாத்தியமே இல்லை என்று தோன்றியது.

இது தொடர்பான செய்திArchived Link

இருப்பினும் ஒரு லட்ச ரூபாய் நாணயம் தொடர்பாக தொடர்ந்து வதந்தி பரவி வருகிறது. ரிவர்வ் வங்கி ஏதேனும் முடிவெடுத்துள்ளதா என்று தேடினோம். அப்போது லட்ச ரூபாய் நோட்டு பற்றி எந்த ஒரு அறிவிப்பும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தி கிடைக்கவில்லை.

அதே நேரத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக, ஜாலியன்வாலா பாக் நினைவையொட்டி சிறப்பு ரூ.100 நாணயங்களை மத்திய அரசு வெளியிட்டதாக செய்தி கிடைத்தது.

தொடர்ந்து தேடியபோது, ஒரு லட்ச ரூபாய் வெளியாக உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என்று தினமலர் வெளியிட்ட செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், ரூ.1000, ஒரு லட்சம் நாணயம் வெளியிடுவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் பற்றி ரிவர்வ் வங்கி அதிகாரியிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், “நாணயங்கள் தயாரிப்பது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லை. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரூ. 150, ரூ.1,000 நாணயங்கள், நாணய பிரியர்களுக்காக மட்டுமே மத்திய அரசு அச்சிட்டு வழங்குகிறது. இந்த நாணயங்களைப் பொக்கிஷமாக மட்டுமே வைக்க முடியும். சந்தையில் உபயோகப்படுத்த முடியாது. இந்த நாணயங்களைப் பெறுவதற்கு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் உள்ளன. முன்பதிவு அடிப்படையில் மட்டுமே இந்த நாணயங்களை மத்திய அரசு வழங்கும். வாட்ஸ் ஆப்பில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது என கூறினார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

தினமலர் செய்திArchived Link

மேலும், இந்த வதந்தி தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இணைய தளம் செய்தி ஒன்று வெளியிட்டதும் கிடைத்தது. அதில், தினமலர் செய்தியை மேற்கோள்காட்டி பதிவிட்டிருந்தனர்.

இது தொடர்பான செய்திArchived Link

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஒரு லட்ச ரூபாய் நாணயம் என்பது மார்ஃபிங் செய்து உருவாக்கப்பட்டது, போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஒரு லட்ச ரூபாய் நாணயம் வெளியிடும் மத்திய அரசு?- பல ஆண்டுகளாக பரவும் தகவல்

Fact Check By: Chendur Pandian 

Result: False